2015-02-21 15:59:00

உலக தாய்மொழிகள் தினம் பிப்ரவரி 21


பிப்.21,2015. அனைவருக்கும் கல்வி என்ற நம் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இன்னும் கல்வியறிவு பெறாமல் இருப்பவர்களுக்கு கல்வி வாய்ப்பை வழங்கவும், கற்கும் தரத்தை அதிகரிக்கவுமான முக்கியத்துவத்தை உலக தாய்மொழிகள் தினம் உணர்த்துகின்றது என்று யுனெஸ்கோ நிறுவனம் கூறியுள்ளது.

இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக தாய்மொழிகள் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள யுனெஸ்கோ நிறுவனத் தலைவர் Irina Bokova அவர்கள், தாய்மொழிவழிக் கல்வி, தரமான கல்விக்குச் சக்தியாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

எல்லாருக்கும் கல்வி என்ற திட்டம், இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றது என்றும் கூறியுள்ள Irina Bokova அவர்கள், இன்னும் முழுமை பெறாத இத்திட்டம் புதிய சவால்களையும் எதிர்நோக்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

உலக மக்கள் தொகையில் பாதிப்பேர், மான்டரின், ஆங்கிலம், இந்தி உட்பட மிகவும் பரவியுள்ள 13 மொழிகளைப் பேசுகின்றனர். இன்று உலகில் 6,500 மொழிகள் வழக்கில் உள்ளன. ஆயினும், அவற்றில் இரண்டாயிரம் மொழிகளை, ஆயிரம் பேருக்குக் குறைவாகவே பேசுகின்றனர்.

பங்களா (வங்காள) மொழி அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 1952ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி பங்களாதேஷ் மாணவர்கள் டாக்காவில் நடத்திய போராட்டத்தில் காவல்துறையால் கொல்லப்பட்டனர். அதன் நினைவாக, இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து உலக தாய்மொழிகள் தினம் பிப்ரவரி 21ம் தேதியன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

ஆதாரம்:UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.