2015-02-21 16:07:00

21காப்டிக்கிறிஸ்தவரின் பெயர்கள் மறைசாட்சி பட்டியலில் இணைப்பு


பிப்.21,2015. ஐ.எஸ். தீவிரவாதிகளால் லிபியாவில் கொலை செய்யப்பட்ட 21 காப்டிக் கிறிஸ்தவர்கள், அத்திருஅவையின் நாள்காட்டியில் மறைசாட்சிகளாக நினைவுகூரப்படுவர் என்று காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபை அறிவித்துள்ளது.

இது குறித்து அறிவித்த எகிப்தின் அலெக்சாந்திரியாவின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபை திருத்தந்தை 2ம் Tawadros அவர்கள், கொலை செய்யப்பட்ட 21 காப்டிக் கிறிஸ்தவர்களின் பெயர்கள் காப்டிக் மறைசாட்சிகள் பட்டியலில் இணைக்கப்படும் என அறிவித்தார்.

terrasanta.net என்ற இணையதளச் செய்தியின்படி, இந்த 21 காப்டிக் கிறிஸ்தவர்களும், காப்டிக் நாள்காட்டியில் 8வது Amshirல் சிறப்பிக்கப்படுவர். அதாவது கிரகோரியன் நாள்காட்டியின்படி அந்நாள் பிப்ரவரி 15 ஆகும். இந்த நாளில் காப்டிக் கிறிஸ்தவ சபை, குழந்தை இயேசு ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழாவைச் சிறப்பிக்கின்றது.

“சிலுவையின் நாட்டுக்கு குருதியில் கையெழுத்திடப்பட்ட செய்தி”  என்று தலைப்பிட்டு கொடுமையான காணொளியை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டு, தாங்கள் உரோம் நகருக்குத் தெற்கே இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளனர். அதன்பின்னர் 21 காப்டிக் கிறிஸ்தவர்களின் தலைகளை வெட்டியுள்ளனர். இக்கிறிஸ்தவர்களில் சிலர் இறக்கும் முன்னர் இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று உச்சரித்தனர் என்று கூறப்படுகின்றது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.