2015-02-20 16:18:00

மனித வர்த்தகமும், கட்டாயவேலையும் ஒழிக்கப்பட வேண்டுகோள்


பிப்.20,2015. உலக மக்களின் பன்மைத்தன்மை மதிக்கப்பட வேண்டும், அனைவரும் சம உரிமை பெற்று, பாதுகாப்பான மாண்புவாழ்வு வாழ வேண்டும் என்ற குரல்கள் இந்நாள்களில் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கின்றன என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

பிப்ரவரி 20, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக சமூக நீதி நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள பான் கி மூன் அவர்கள், மனித வர்த்தகம் மற்றும் கட்டாய வேலையை ஒழிப்பது குறித்த இவ்வாண்டின் தலைப்பு பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று உலகில் ஏறக்குறைய 2 கோடியே 10 இலட்சம் மனிதர்கள், நவீன அடிமை முறைகளின் பல்வேறு நிலைகளால் துன்புறுகின்றனர் என்றும், மனித வர்த்தகத்தில் ஈடுபடுவோரைக் கடுமையாய்த் தண்டிக்காதவரை இந்தச் சமூகக் குற்றங்களை ஒழிக்க முடியாது என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 20ம் தேதியன்று உலக சமூக நீதி நாள் கடைப்பிடிக்கப்படுமாறு ஐ.நா. பொது அவை 2007ம் ஆண்டில் தீர்மானம் நிறைவேற்றியது. 

உலகில் இனம், மதம், கலாச்சாரம் போன்றவற்றில் நிலவும் பாகுபாடுகளைக் களையவும், ஏழ்மை, தனிமை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை ஒழிக்கவும் இத்தினம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்:UN/வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.