2015-02-20 16:33:00

நான்கு ஐரோப்பியரில் ஒருவர் வறுமையில் வாடுகின்றனர்,காரித்தாஸ்


பிப்.20,2015. உலகளாவிய புறக்கணிப்புக் கலாச்சாரத்திற்கு மத்தியில், ஐரோப்பாவில் நான்கு பேருக்கு ஒருவர் வீதம் வறுமையில் வாடுகின்றனர் என்று ஐரோப்பிய காரித்தாஸ் நிறுவனம் கூறியது.

EU என்ற ஐரோப்பிய சமுதாய அவையில் கிரேக்க நாட்டின் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக, EU நாடுகளின் நிதி அமைச்சர்கள் அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளவேளை, 46 ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பாகிய ஐரோப்பிய காரித்தாஸ் நிறுவனம் ஐரோப்பியர்களின் நிலைமை பற்றி கூறியுள்ளது.

“ஏழ்மையும் சமத்துவமற்ற நிலையும் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன, நீதியான சமூக அமைப்புகள் அவற்றுக்குத் தீர்வு” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள ஐரோப்பிய காரித்தாஸ் நிறுவனம், ஐரோப்பாவின் சமூக நலவாழ்வு அமைப்பு முறைகளில் காணப்படும் அநீதி அமைப்புகளைச் சுட்டிக் காட்டியுள்ளது.

இஸ்பெயின், போர்த்துக்கல், கிரேக்கம் ஆகிய நாடுகளில் பத்து விழுக்காட்டினர் சமுதாயத்தில் மிக உயர்ந்தும், இன்னும் பத்து விழுக்காட்டினர் அடிமட்டத்திலும் உள்ளனர் எனக்கூறும் இந்நிறுவனம், இந்நாடுகளில் சமத்துவமின்மை அதிகம் காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கிரேக்க நாட்டின் புதிய அரசு, கடன்கொடுத்த அனைத்துலக அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கும் இவ்வேளையில், அடுத்த மாதத்திற்கான புதிய கடன்களை ஏற்கவும் மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகின்றது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.