2015-02-20 16:08:00

தீவிரவாதத்தைத் தடுப்பது உலகத்தலைவர்களின் அறநெறி சார்ந்த கடமை


பிப்.20,2015. வன்முறை நிறைந்த தீவிரவாதத்தைத் தடுப்பது குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், இந்த 21ம் நூற்றாண்டில் நம் மனிதக் குடும்பங்களுக்கு மாபெரும் சோதனையாக அமைந்திருக்கும் தீவிரவாதத்தைத் தடுப்பதற்கு உலகத் தலைவர்களுக்கு அறநெறி சார்ந்த கடமை உள்ளதை நினைவுபடுத்தினார்.

வன்முறை நிறைந்த தீவிரவாதத்தைத் தடுப்பதற்கும், மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஒரே நேரத்தில் இடம்பெற வேண்டும் என்று உரைத்த பான் கி மூன் அவர்கள், ஐ.எஸ். இஸ்லாமியக் குழு, போக்கோ ஹாரம் அமைப்பு உட்பட புதிதாக உருவெடுத்துள்ள, நாடுகடந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் முன்வைக்கும் அவசரகால சவால்களைச் சுட்டிக் காட்டினார்.

பயங்கரவாத குழுக்கள், அப்பாவி மக்களுக்கு எதிராக நடத்தும், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட கொடூரங்களை எந்தக் காரணங்கள் கொண்டும் நியாயப்படுத்த முடியாது என்றும், இம்மக்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்றும் அவர் கூறினார்.

கட்டாயத் திருமணம், பாலியல்அடிமைத்தனம், கடத்தல், பாலியல் வன்கொடுமை போன்றவற்றுக்கு இந்த அப்பாவி மக்கள் திட்டமிட்டு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் கவலை தெரிவித்தார் பான் கி மூன்.

ஆதாரம்:UN/வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.