2015-02-20 15:56:00

உக்ரேய்னில் இடம்பெறுவது அண்டை நாட்டினர் வலிய நடத்தும் சண்டை


பிப்.20,2015 இவ்வெள்ளி காலையில் வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த உக்ரேய்ன் ஆயர்கள், தற்போது உக்ரேய்ன் நாட்டில் இடம்பெற்றுவருவது உள்நாட்டுச் சண்டை அல்ல, மாறாக, அண்டை நாட்டினர் நேரடியாக வலியவந்து நடத்தும் சண்டை எனக் கூறினர்.

அண்டை நாட்டினரின் இந்தப் பகைமைச் செயலுக்கு உக்ரேய்ன் மக்கள் பலிகடா ஆகிவருகின்றனர் என்றும், பெலாருஸின் மின்ஸ்க் நகரில் கையெழுத்திடப்பட்ட அமைதி உடன்பாட்டையும் மீறி வன்முறை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது என்றும் உக்ரேய்ன் தலத்திருஅவைத் தலைவர் பேராயர் Sviatoslav Shevchuk தெரிவித்தார்.

உக்ரேய்னில் இடம்பெற்றுவரும் சண்டையால், 1,40,000 சிறார் உட்பட இருபது இலட்சத்துக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்துள்ள மக்கள் குறித்து ஆயர்கள் கவலையடைந்திருப்பதாகவும் பேராயர் Shevchuk தெரிவித்தார்.

மேலும், “அருளடையாளங்கள், நம் வானகத் தந்தை நம்மீது கொண்டுள்ள கனிவையும் அன்பையும் வெளிப்படுத்துபவை” என்ற வார்த்தைகளை, இவ்வெள்ளியன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம்:வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.