2015-02-20 10:11:00

இறைப் பேருண்மையை அனுபவிப்பதற்கு திருவழிபாடுகள் உதவ வேண்டும்


பிப்.20,2015. விசுவாசிகள், கடவுளின் பேருண்மையில் நுழைவதற்கும், கிறிஸ்துவைச் சந்திப்பதில் கிடைக்கும் வியப்புணர்வை அனுபவிப்பதற்கும் திருவழிபாடுகள் உதவுவதாய் அமைய வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வியாழனன்று வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில் உரோம் மறைமாவட்ட பங்குத்தந்தையருடன் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் கலந்துரையாடிய திருத்தந்தை, மறையுரை மற்றும் திருவழிபாட்டை சிறப்பாக நிறைவேற்றும் கலை குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இயேசுவால் அழைக்கப்பட்டபோது திருத்தூதர்கள் அனுபவித்த வியப்பையும், ஈர்ப்பையும் திருவழிபாடுகளில் விசுவாசிகள் அனுபவிக்குமாறு அவை அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அருள்பணியாளர்களுக்கு மறையுரை ஒரு சவாலாக உள்ளது என்றும், மறையுரை தயாரிப்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் குறிப்பிட்டார்.

திருப்பலியை மிகவும் ஆடம்பரமாகவும், செயற்கையாகவும் நிறைவேற்றுகின்ற அல்லது திருப்பலியின் அடையாளங்களை தவறாகப் பயன்படுத்துகின்ற அருள்பணியாளர்களும் உள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஓர் அருள்பணியாளர், திருப்பலியில் இடம்பெறும் அசைவுகளையும், குறிப்பிட்ட அடையாளங்களையும் மிகைப்படுத்திச் செய்தால், விசுவாசிகள் இறைப்பேருண்மைக்குள் நுழைய முடியாது, ஏனெனில் அவரின் சக்தியும், கவனமுமெல்லாம் அந்த அசைவுகளிலே உள்ளன என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அதேநேரம், ஓர் அருள்பணியாளர், திருப்பலியின் காட்சி மனிதராக இருந்தால் அவரால் இறைப்பேருண்மைக்குள் நுழைய முடியாது, இறைப்பேருண்மை பற்றிய வியப்புணர்வை ஏற்படுத்துதல் எளிதானதல்ல என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2005ம் ஆண்டு மார்ச் முதல் தேதியன்று திருவழிபாட்டுத் திருப்பேராயத்தின் ஆண்டுக் கூட்டத்தில், "திருவழிபாட்டை சிறப்பாக நிகழ்த்தும் கலை" (ars celebrandi) என்ற தலைப்பில் உரையாற்றுவதற்குத் தான் தயாரித்த உரையில் எதிர்கொண்ட குறைபாடுகள் பற்றியும் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் "ars celebrandi" உரையின் நகல்கள், இச்சந்திப்பில் கலந்துகொண்ட உரோம் அருள்பணியாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. இந்த இரண்டு மணி நேரச் சந்திப்பில், ஏறக்குறைய நாற்பது நிமிடங்கள் கேள்வி பதில் நிகழ்வாக அமைந்திருந்தது. 

ஆதாரம்:வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.