2015-02-19 16:04:00

பேராயர் தொமாசி: அனைவருக்கும் பாகுபாடின்றி மருத்துவ உதவிகள்


பிப்.19,2015. மனிதர்கள் அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இன்றி மருத்துவ சிகிச்சைகளும், மருந்தும் கிடைப்பதை அரசுகள் உறுதி செய்யவேண்டும் என்பதையே திருப்பீடம் வலியுறுத்துகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. அவைக் கூட்டங்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பங்கேற்கும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், பிரவரி 18, இப்புதனன்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கழகக் கூட்டத்தில் இவ்வாறு உரையாற்றினார்.

உலகின் பலநாடுகளில் 5,000 மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் 18,000 மேற்பட்ட மருத்துவ உதவி நிலையங்கள் வழியே கத்தோலிக்க திருஅவை நலப்பணிகள் ஆற்றிவருவதை தன் உரையில் குறிப்பிட்ட பேராயர் தொமாசி அவர்கள், உலக அரசுகளும், பன்னாட்டு அமைப்புகளும் கத்தோலிக்க திருஅவைக்கு வழங்கும் ஆதரவு இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பெரும் இலாபத்தை மனதில்கொண்டு செயலாற்றுவதால், உயிர் காக்கும் மருந்துகள் வறியோரைச் சென்றடைவது கடினமாகி வருகிறது என்பதை பேராயர் தொமாசி தன் உரையில் சுட்டிக்காட்டினார்

மருத்துவ நிறுவனங்களின் பேராசையால் அதிகம் துன்புறுவது குழந்தைகளே என்பதை வலியுறுத்திய பேராயர் தொமாசி அவர்கள், அளவிலும், சக்தியிலும் குழந்தைகளுக்கு ஏற்ற மருந்துகளை உருவாக்குவதில் மருத்துவ நிறுவனங்கள் கூடுதல் அக்கறை காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.