2015-02-19 16:36:00

கடுகு சிறுத்தாலும்.. : நடவடிக்கையே காட்டிக்கொடுத்துவிடும்


ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர், அவரின் எதிரியைக் கைது செய்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்குரைஞர் எழுந்து, “கனம் நீதிபதி அவர்களே! இவரால் கொலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப்போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.

நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்ற வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் என நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்குரைஞர் எழுந்தார்.

“கனம் நீதிபதி அவர்களே! நீங்கள் உட்பட யாருமே, காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டார் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்”என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.

பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்து, குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வழக்குரைஞர் எழுந்து, ‘எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இது’ என்று கேட்டார்.

 “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை” என்று பதில் சொன்னார் நீதிபதி. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.