2015-02-19 15:53:00

இலங்கைத் தலத்திருஅவை வழங்கிய தொகை மீண்டும் இலங்கைக்கே


பிப்.19,2015 திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி மாதம் இலங்கையில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் இறுதியில், திருத்தந்தையின் தர்மப் பணிகளுக்காக அவருக்கு இலங்கைத் தலத்திருஅவை வழங்கிய தொகையை, திருத்தந்தை அவர்கள் இலங்கைக் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களிடமே வழங்கியுள்ளார்.

கொழும்புவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கையின் திருத்தூதர் என்றழைக்கப்படும் ஜோசப் வாஸ் அவர்களைப் புனிதராக உயர்த்திய திருப்பலிக்குப் பின், இலங்கைத் தலத்திருஅவை சார்பில், 87 இலட்சம் (இலங்கை) ரூபாய் மதிப்புள்ள காசோலையை கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் திருத்தந்தைக்கு வழங்கினார்.

திருத்தந்தையின் தர்மப் பணிகளுக்காக வழங்கப்பட்ட இந்தத் தொகையை திருத்தந்தை அவர்கள் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் கர்தினால் இரஞ்சித் அவர்களிடமே திரும்பக் கொடுத்து, அத்தொகையை இலங்கை வாழ் வறியோருக்குப் பயன்படுத்துமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார் என்று, 'Messenger' என்ற கத்தோலிக்க இதழுக்கு அளித்த பேட்டியில் கர்தினால் இரஞ்சித் அவர்கள் கூறியுள்ளார்.

இத்தொகையானது, இலங்கையில் உள்ள அனைத்து மறைமாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது என்றும், இதனைப் பயன்படுத்தும் முறை குறித்து அறிக்கையொன்று திருத்தந்தைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் கர்தினால் இரஞ்சித் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.