2015-02-19 16:02:00

இறைவனோடு 24 மணிநேரம் செலவிட திருத்தந்தை அழைப்பு


பிப்.19,2015 சென்ற ஆண்டைப் போலவே, இவ்வாண்டிலும் மார்ச் 13, 14 ஆகிய நாள்களில் 24 மணிநேரம் இறைவனோடு செலவிட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

நற்செய்தியை புதுவழியில் பறைசாற்றும் பணிக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவை, "இறைவனோடு 24 மணி நேரம்" என்ற கருத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த தவக்கால முயற்சியை, அறிவித்துள்ளது.

மார்ச் 13, வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நடைபெறும் பாவ மன்னிப்பு வழிபாட்டினை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னின்று நடத்துவார்.

இதைத் தொடர்ந்து, உரோம் நகரிலும், உலகின் பல கோவில்களிலும் நிகழும் முழு இரவு நற்கருணை ஆராதனையின்போது, ஒப்புரவு அருள் அடையாளம் வழங்க, அருள் பணியாளர்கள் காத்திருப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த நாட்டில் நிலவும் சூழலுக்குத் தகுந்தவாறு, இந்த முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் புதுவழி நற்செய்திப் பணி திருப்பீட அவை அழைப்பு விடுத்துள்ளது.

மார்ச் 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளின் இரண்டாம் ஆண்டு நிறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.