2015-02-18 15:56:00

லிபியாவில் கிறிஸ்துவின் பெயரை உச்சரித்தபடியே உயிர் துறந்தனர்


பிப்.18,2015 இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பினரால், லிபியா நாட்டுக் கடற்கரையில் அண்மையில் கொலையுண்ட காப்டிக் கத்தோலிக்க இளையோரில் பலர் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரை உச்சரித்தபடியே உயிர் துறந்ததைக் காண முடிந்தது என்று காப்டிக் கத்தோலிக்க ஆயர் Anba Antonios Aziz Mina அவர்கள் கூறினார்.

அச்சத்தை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிரவாதிகள் வெளியிட்ட இந்த காணொளி நிகழ்ச்சி, காண்போரைத் துயரத்தில் ஆழ்த்தினாலும், இளையோரில் பலர் இயேசுவின் பெயரை உச்சரித்தபடியே இறந்தது, முற்காலத்தின் மறைசாட்சிகளை மனக்கண் முன் கொணர்ந்தது என்று ஆயர் Aziz Mina அவர்கள், Fides செய்திக்கு அளித்த குறிப்பொன்றில் கூறியுள்ளார்.

தீவிரவாதிகள் உருவாக்க எண்ணிய அச்சத்தை வென்று, இவ்விளையோர் இறைநம்பிக்கையுடன் இறந்தது, மறைசாட்சிய மரணத்திற்கு மற்றோர் எடுத்துக்காட்டு என்று காப்டிக் கத்தோலிக்க ஆயர் Aziz Mina அவர்கள் எடுத்துரைத்தார்.

இதற்கிடையே, கொலையுண்ட இளையோரில் பெரும்பான்மையானோர் எகிப்தின் Minya என்ற பகுதியிலிருந்து வந்தவர்கள் என்பதால், அப்பகுதியில் அரசின் செலவில் மறைசாட்சிகளின் கோவில் ஒன்று கட்டப்படும் என்று எகிப்து அரசுத் தலைவர், Abdel Fattah al-Sisi அவர்கள் அறிவித்துள்ளதாக Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.