2015-02-18 15:33:00

ரூ.60,000 கோடி முதலீட்டில் சூரிய மின் உற்பத்தி திட்டம்


பிப்.18,2015 இந்திய மத்திய அரசு நிறுவனமான தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited - National Thermal Power Corporation Limited) சூரிய மின் உற்பத்தித் திட்டங்களில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ. 60,000 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

சூரிய மின் உற்பத்தி மூலம் 10,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதாக மத்திய அரசிடம் NTPC உறுதி அளித்துள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு ரூ. 60,000 கோடி முதலீடு தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

NTPC நிறுவனம், அனல் மின் நிலையங்கள் வழியே 43,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. அத்துடன் சூரிய மின் உற்பத்தி நிலையம் வழியே 10,000 மெகாவாட்டை உற்பத்தி செய்யப் போவதாக தெரிவித்துள்ளது.

தற்போது இந்நிறுவனம் மரபு சாரா எரிசக்தி மூலம் 110 மெகாவாட் மின்னுற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 100 கோடி யூனிட் மின்சார உற்பத்தி செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதி 250 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம், அடுத்த மாத இறுதியில் உற்பத்தியை தொடங்க உள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்குத் தேவையான நிலம் கிடைப்பது குறித்து, குஜராத், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஆய்வு நடத்தப்படுவதாக தேசிய அனல் மின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : தி இந்து/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.