2015-02-18 16:01:00

மத்தியக் கிழக்கு நாடுகளில் அமைதி நிலைபெற உண்ணா நோன்பு


பிப்.18,2015 பிளவுகளும், பிரிவுகளும் பாவம் என்பதால், அதைக் களைந்து, ஒப்புரவையும், ஒற்றுமையையும் உருவாக்க தவக்காலம் தகுந்த ஒரு வாய்ப்பு என்று பாபிலோனிய முதுபெரும் தந்தையும், கல்தேய வழிபாட்டு முறை திருஅவையின் தலைவருமான முதலாம் இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் தன் தவக்காலச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அறிவிலும், வயதிலும் முதிர்ச்சி அடைந்தவர்களாய், நமது சொல், செயல் அனைத்தும், வரைமுறைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டனவாய் இருக்குமாறு நாம் விழிப்பாய் இருக்கவேண்டும் என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், தன் செய்தியில் அறிவுறுத்தியுள்ளார்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் அமைதி நிலைபெறவும், உடன்பிறந்தோர் என்ற உணர்வு சமுதாயத்தில் வளரவும், மன்னிப்பு முயற்சிகள் வாழ்வில் முதலிடம் பெறவும் அனைவரும் உண்ணா நோன்பு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

வரலாற்றில் கடுமையான பலச் சூழல்களைச் சந்தித்து, மீண்டுவந்துள்ள மத்தியக் கிழக்குப் பகுதி, தற்போது சந்தித்துவரும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை கொள்வோம் என்ற கருத்துடன், முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.