2015-02-18 15:02:00

திருத்தந்தையின் மறைக்கல்வி: சகோதர சகோதரிகளின் முக்கியத்துவம்


பெப்.18,2015. ஐரோப்பாவுக்கு இது குளிர் காலமெனினும், உரோம் நகரின் காலநிலை மிதமான வெப்பத்துடன் ஓரளவு ஒத்துழைத்ததால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இப்புதன் மறைக்கல்வி உரை தூய பேதுரு வளாகத்திலேயே இடம்பெற்றது. பல ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்க, குடும்பம் குறித்த தன் மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக, இப்புதனன்று, ஒவ்வொருவரின் 'உடன்பிறந்த சகோதர சகோதரிகள்' குறித்து தன் உரையைத் துவக்கினார்.

ஒரு குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் முக்கியத்துவம் குறித்து இன்று நோக்குவோம்.  ஏனையக் குழந்தைகளுடன் ஒரு குடும்பத்தில் வாழ்வது என்பது, இயேசு கிறிஸ்துவில் தன் நிறைவைக் காணும் ஓர் ஆழமான மனித அனுபவமாகும். ஏனெனில், இயேசு நம் சகோதரராக இவ்வுலகிற்கு வந்து நம்மை வானகத்தந்தையின் குழந்தைகளாக்கினார். நாம் விவிலியத் தொடக்க நூலில் வாசிக்கும், காயின் ஆபேலின் கதை, மனிதக் குடும்பத்திற்குள் நாம் நம் சகோதரிகளின் காவலாளி என்பதை நமக்குத் தெளிவாகக் காண்பிக்கிறது. எவ்வாறு ஒரு நல்ல சகோதரனாக சகோதரியாக வாழ்வது என்பதை நாம் குடும்பங்களில் கற்றுக்கொள்கிறோம். வீட்டில் நாம் கற்றுக்கொள்வதே, பின்னர் சமூகம் முழுமையின் வளப்படுத்தலுக்கான ஆதாரமாக மாறுகிறது. அனைவரையும் நம் சகோதர சகோதரிகளாக நோக்குவதற்கும் இயேசுவின் அருளே நம்மை வழிநடத்திச் செல்கிறது. அதுவே பிரிவினைகளையும் வேறுபாடுகளையும் ஒப்புரவாக்கி, உண்மை விடுதலை மற்றும் சரிநிகர்தன்மை கொண்ட சமூகத்தைக் குறித்த வாக்குறுதியை நமக்கு வழங்குகிறது. குடும்பங்களில் சகோதரத்துவ அன்பு தரும் அனுபவம் என்பது நாம் மாற்றுத்திறனாளிகளான குழந்தைகளிடம் காட்டும் அக்கறையில் சிறப்பான விதத்தில் வெளிப்படுத்தப்படுகின்றது. இதே அன்பையும் அக்கறையையும் இவ்வுலகின் அனைத்துச் சகோதர சகோதரிகளுக்கும் குறிப்பாக, உதவி அதிகம் தேவைப்படுவோருக்கு நாம் காண்பிக்கவேண்டும் என இயேசு கிறிஸ்து நமக்குக் கற்பிக்கிறார். பெரும்பாலான வேளைகளில் பாராமுகமாய் அக்கறையின்றி வாழும் நம் சமூகங்கள், சகோதரத்துவ உணர்வை ஊக்கமூட்டி வளர்க்கக் கற்றுக்கொள்வதாக. அன்பு கூர்ந்தும், அன்பு கூரப்பட்டும் வாழும் சகோதர சகோதரிகளாகிய நம் இளையோரில் காணப்படும் இறைவனின் மிகப்பெரும் ஆசீரை கண்டுகொண்டு ஊக்கமூட்டிப் பாராட்ட உலகெங்கிலுமுள்ள குடும்பங்கள் முன்வருவார்களாக.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அண்மையில் லிபியாவில் கொல்லப்பட்ட எகிப்து காப்டிக் கிறிஸ்தவர்களுக்காகச் செபிக்குமாறு விண்ணப்பம் ஒன்றை முன்வைத்தார். மத்திய கிழக்கு பகுதி மற்றும் வட ஆப்பிரிக்காவில் உயிரிழந்தோர், காயமுற்றுள்ளோர், அகதிகளாகியுள்ளோர் ஆகியோரை நினைவுகூர்ந்து அவர்களுக்காகச் செபிப்போம். லிபியாவின் இன்றைய துன்பகரமான சூழல்களைக் களையும் நோக்கில் ஓர் அமைதியான தீர்வைக் கண்டுகொள்ள அனைத்துலக சமூகம் முயல்வதாக, என அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.