2015-02-18 14:24:00

கடுகு சிறுத்தாலும்.... : பெற்றோரின்றி வாழ்வில்லை


அலெக்சாந்தரும் அந்தோனியும் அண்ண‌ன் த‌ம்பிக‌ள். த‌ங்க‌ள் வ‌ய‌தான‌ த‌ந்தையை யார் க‌வ‌னித்துக் கொள்வ‌து என்ப‌தில் பிர‌ச்சனை துவ‌ங்கி, ஒவ்வொரு மாத‌மும் ஒருவ‌ர் அவ‌ர‌வ‌ர் வீட்டில் த‌ந்தையை வைத்து பார்த்துக்கொள்வது என‌ முடிவான‌து. த‌ந்தையை வைத்திருக்கும் ம‌க‌ன், எப்போது மாத‌ம் முடியும் என‌ காத்திருப்ப‌தே வ‌ழக்க‌மாகிய‌து. அந்தோனியின் ஒரே ம‌கன் அமுதனுக்கோ, தாத்தா மீது கொள்ளை ஆசை. அவ‌ன் ம‌ட்டும்தான் தாத்தா த‌ங்க‌ள் வீட்டுக்கு வ‌ரும் மாத‌ம் பிற‌ந்த‌தும் ம‌கிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பான். ஒருமுறை மாத‌க் க‌டைசியில் தாத்தாவை பெரிய‌ப்பா வீட்டுக்கு அனுப்ப‌வேண்டிய‌ நாள் வ‌ந்த‌தும் ம‌ன‌ம் வாடிய‌ அமுத‌ன் த‌ன் த‌ந்தையை நோக்கி,

“அப்பா, எனக்கொரு சந்தேகம்’ என்றான்.

“என்னடா சந்தேகம்?’  கேட்டார் தந்தை.

“தாத்தாவுக்கு நீ, பெரியப்பான்னு ரெண்டு பிள்ளைங்கள்…தாத்தாவை மாறி மாறி வச்சுக்கிறீங்க… உனக்கு நான் ஒரே பிள்ளை. உனக்கு வயசாய்ட்டா ஒரு மாசம் நான் வச்சுக்குவேன்…. அடுத்த மாசம் நீ எங்கே போவே…?’

யாரோ பிடரியில் ஓங்கி அறைந்ததுபோல உணர்ந்தார் தாத்தாவின் மகனும், பையனின் தகப்பனுமான அந்தோனி. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.