2015-02-17 12:08:00

புறக்கணிப்புக்களைக் களைவதற்கு தெளிவான வழிகளை கண்டுபிடிப்போம்


பிப்.17,2015. “நம்மிடமுள்ள புறக்கணிப்புக்களைக் களைவதற்கு, தவக்காலத்தில் தெளிவான வழிகளை  கண்டுபிடிப்போம்” என்ற செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், உரோம் கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள சிறார் பாதுகாப்பு மையத்துக்குத் தனது நல்வாழ்த்துச் செய்தியை அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மையம் நல்ல பலன்களைத் தரவேண்டுமென்று செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இம்மையத்தின் ஆரம்பம் பற்றி இத்திங்கள் பிற்பகலில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்துக்கு இச்செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை. இச்செய்தி, திருப்பீட சிறார் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினரான இயேசு அருள்பணி Hans Zollner யி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இன்னும், ஸ்காட்லாந்து தேசிய கிறிஸ்தவ சபையின் தலைவர் John Chalmers அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஸ்காட்லாந்துக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்புவிடுத்துள்ளார்.

இத்திங்கள் காலையில் வத்திக்கானில் திருத்தந்தையைச் சந்தித்தபோது இவ்வழைப்பை விடுத்தார் John Chalmers.

Kirk எனப்படும் ஸ்காட்லாந்து தேசிய கிறிஸ்தவ சபை, 1560ம் ஆண்டில் ஸ்காட்லாந்து சீர்திருத்தத்தின்போது தொடங்கப்பட்டது. ஸ்காட்லாந்தில், கத்தோலிக்கருக்கும், பிரிந்த சபையினருக்கும் இடையே நூற்றாண்டுகளாக பிரிவினைகள் நிலவி வருகின்றன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.