2015-02-17 11:22:00

எகிப்து ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவருக்கு தொலைபேசி மூலம் இரங்கல்


பிப்.17,2015. கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக, ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட 21 எகிப்திய காப்டிக் கிறிஸ்தவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாறுவதற்காக இத்திருப்பலியை அர்ப்பணிப்போம் என்று, இச்செவ்வாய் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியைத் தொடங்கியபோது கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ விசுவாசத்துக்காக மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்ட இந்த 21 கிறிஸ்தவர்கள், அவர்களின் இழப்பால் மிகவும் துயருறும் எனது சகோதரர் Tawadros,  மற்றும் அக்கிறிஸ்தவர்களின் குடும்பங்களுக்காகச் செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை.

கடவுளே, நீரே எனது பாதுகாப்பு, கற்பாறை, கோட்டை அரண், எனது அடைக்கலம் என்றும் திருப்பலியில் செபித்தார் திருத்தந்தை.

ஐ.எஸ். இஸ்லாமிய அரசோடு தொடர்புடைய பயங்கரவாதிகளால் பிடிக்கப்பட்ட 21 எகிப்திய காப்டிக் கிறிஸ்தவர்கள், லிபியாவின் திரிபோலி நகர் கடற்கரையில் ஒரே நேரத்தில் தலைகள் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு இத்திங்களன்று தனது கண்டனத்தை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர் திருத்தந்தை 2ம் Tawadros அவர்களிடம் தொலைபேசியில் பேசி தனது ஆறுதலையும் செபத்தையும் தெரிவித்தார். அதோடு இச்செவ்வாய் காலை திருப்பலியில் செபிப்பதாகவும் உறுதி கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.