2015-02-17 14:51:00

இலங்கை மனித உரிமைகள் விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு


பிப்.17,2015. இலங்கையின் இறுதிப்போரில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையை தற்போது வெளியிடாமல் ஒத்திவைத்திருப்பது ஒரு தடவைக்கு மட்டுமே என்று ஐநா மனித உரிமைகள் அவைத் தலைவர் Zeid Ra'ad Al Hussein கூறினார்.

இலங்கையின் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையை தற்போது வெளியிடாமல் மேலும் 6 மாதத்துக்கு, அதாவது வருகிற செப்டம்பர் வரை ஒத்திவைப்பது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய Zeid Ra'ad Al Hussein அவர்கள் இவ்வாறு கூறினார்.

இலங்கையின் புதிய அரசு, மனித உரிமைகள் குறித்த பல விடயங்களில் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ள நிலையில், அவ்வரசின் வேண்டுகோள் எதார்த்தமாகத் தெரிவதாகவும், இலங்கையில் மாறிவரும் நிலைமைகளில் இந்த அறிக்கையை பலப்படுத்தும் வகையில் மேலும் ஆதாரங்கள் கிடைக்கலாம் என்றும் Al Hussein கூறியுள்ளார்.

இலங்கை மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களும், சாட்சியம் வழங்கியவர்களும், இந்த நீடிப்பு இதனை நீர்த்துப்போகச் செய்யும் விடயமாக எண்ணி அச்சம் கொள்ளலாம் என்ற எதார்த்தத்தைத் தான் ஏற்பதாகக் கூறியுள்ள அவர், பாதிக்கப்பட்டவர்கள் குரலாக ஐ.நா. செயல்படும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் Al Hussein உறுதி கூறியுள்ளார்.

இதற்கிடையே, இவ்வறிக்கையை தள்ளிப்போடும் முடிவை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை எடுத்தால் அதன் காரணமாக குற்றம் புரிந்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிச் செல்லக்கூடும் என, ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை அவைக் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருந்தது. 

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.