2015-02-16 15:50:00

வாரம் ஓர் அலசல் – கருணை அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறியும்


பிப்.16,2015. இந்த பிப்ரவரியில் விலங்குகள் நீதி வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இதையொட்டி இஞ்ஞாயிறு காலை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விலங்குகள் ஆர்வலர் ஒருவர், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். இந்தியாவில் புலிகளைப் பிடிப்பதற்கு அவற்றின் முன்னர் ஆடுகளை நிறுத்துகின்றனர், ஊருக்குள் புகும் யானையை விரட்டுவதற்கு டயர்களை எறித்து அவற்றின்மீது வீசுகின்றனர், வனவிலங்குகளும் உயிருள்ளவை.  எனவே அவற்றின் மாண்பை மதித்து, அவற்றைக் கருணையோடு நடத்த வேண்டும்... இப்படி அவர் கூறிய பல தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, பல இடங்களில் மனிதர் நடத்தப்படுவது பற்றிய சிந்தனை எழுந்தது. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாகிய பிரித்தானியாவின் Birminghamலுள்ள ஒரு மருத்துவமனையின் அவசர உதவிப் பிரிவுக்கு வெளியே மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் 47 வயதான ஒருவர் விழுந்து கிடந்துள்ளார். அம்மருத்துவமனையின் பணியாளர் ஒருவர் அதைப் பார்த்து சற்றும் கண்டுகொள்ளாமல், கால்சட்டைப் பைக்குள் கைவிட்டு நின்றபடி இருந்துள்ளார். தகுந்த நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் அவ்விடத்திலேயே அந்நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பான காணொளியை வைத்து அந்தப் பணியாளருக்கு நீதிமன்றம் எட்டு மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகள், 21 எகிப்திய காப்டிக் கிறிஸ்தவ இளைஞர்களை, லிபியா தலைநகர் திரிபோலியில் ஒரு கடற்கரையில் வரிசையாக மண்டியிடச் செய்து, தலைமுடியை வெட்டுவதுபோல, ஒரே நேரத்தில் தலையை வெட்டிக் கொன்றுள்ளனர். இஞ்ஞாயிறன்று வெளியான இந்த காணொளியைப் பார்த்து உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது உரைகளில் அடிக்கடி வலியுறுத்திவரும் வரும் முக்கியமான பண்புகளில் கருணையும் ஒன்று. நாம் அனைவரும் கருணையுடன் செயல்பட வேண்டுமெனக் கூறி, தானும் அவ்வாறே நடந்து வருகிறார் திருத்தந்தை. இஞ்ஞாயிறு திருப்பலியிலும், மூவேளை செப உரையிலும், கருணையையும், நன்மைத்தனத்தையும் பரப்புங்கள் என்று புதிய கர்தினால்களிடமும், நம் எல்லாரிடமும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். இயேசு தொழுநோயாளியைக் குணமாக்கிய நிகழ்வை வைத்து விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,

எருசலேம் பொதுச் சங்கம் நடந்த காலத்திலிருந்து திருஅவையின் பாதை எப்பொழுதும் இயேசுவின் பாதையாக, அதாவது கருணையும், பிறரை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் பாதையாக இருந்து வருகிறது. இயேசுவின் கருணையுள்ளமே, வேதனையில் இருந்த ஒவ்வொரு மனிதருக்கு அருகிலும் அவரைக் கவர்ந்திழுத்துச் சென்றது. சமூகத்தில் ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட மனிதரை மீண்டும் சமூகத்தோடு ஒன்றிணைக்கும் ஆவலை அவரிடம் எழுப்பியது. தொழுநோயாளிகள், உடல் அளவில், மனத்தளவில், ஆன்மீக அளவில், சமூக அளவில் எவ்வளவு துன்பங்களையும் அவமானத்தையும் அடைந்திருப்பார்கள், அவர்களின் நிலையானது, உயிரோடு இருந்தபோதே இறந்த வாழ்வாகும். தங்களின் தந்தையரால் முகத்தில் துப்பப்பட்டவர்களைப் போன்றவர்கள் அவர்கள் ....

இவ்வாறு மறையுரையில் கூறிய திருத்தந்தை, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளிடம், இயேசுவின் இக்கருணைப் பண்பையே மீண்டும் எடுத்துரைத்தார்.

இயேசு உலகின் தீமைகளை, கடவுளின் கருணையின் வல்லமையால் உடைத்தெறிந்தார். நாம் பிறருக்கு உதவும்போது அவர்களின் கண்களைப் பார்த்து, அச்சமின்றி அவர்களைத் தொட்டு அவர்களை வரவேற்கிறோமா என்ற கேள்வியை முன்வைத்தார். கடவுளின் கருணை, அனைத்துத் தடைகள்மீது வெற்றி காண்கிறது. நாம் கடவுளின் உண்மையான பிள்ளைகளாக வாழ விரும்பினால் நாமும் கடவுளின் கருணை நிறைந்த அன்பை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும், அனைத்துவிதமான புறக்கணிப்புகளையும் நாம் விலக்கி வாழ வேண்டும்....

எனக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. கருணை கொண்ட உள்ளம், கடவுள் வாழும் இல்லம் என்று சொல்வார்கள். சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி மாணவிகள் அண்மையில் தங்களது தலைமுடியை, புற்றுநோயாளிகளுக்காகத் தானமாக வழங்கியுள்ளனர் என்ற செய்தியை நேயர்களே நீங்களும் அறிந்திருப்பீர்கள். இம்மாதம் 4ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை சென்னையில் நடைபெற்ற தலைமுடியைத் தானம் செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு முடிதானம் அளித்துள்ளனர். இது குறித்து இந்நிகழ்ச்சியின் பொறுப்பாளரான மாணவி மீரா கூறுகையில்,

புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோ சிகிச்சைக் கொடுக்கப்படும்போது முடி உதிர்ந்து விடுவதால் சில பெண்கள் மனத்தளவில் பாதிக்கப்பட்டு வெளியில் செல்வதையே தவிர்த்து விடுகின்றனர். அதேசமயம் வசதியுள்ளவர்கள் விக் வைத்துக் கொண்டு வெளியில் செல்கிறார்கள். விக்கின் விலை அதிகம் என்பதால் ஏழைகளால் வாங்க முடியாத நிலை உள்ளது. எனவே முடியைத் தானமாகப் பெற்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் விக் தயாரித்து அவர்களுக்கு வழங்க எண்ணினோம். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு பெண்ணுக்கும் தலைமுடி முக்கியமான ஒன்று. அதிலும் கல்லூரிப் பெண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். தன் அழகிற்கே ஆதாரம் தலைமுடிதான் என்று நினைப்பவர்கள். இந்நிலையில், கல்லூரிக்குள்ளே 200 பேருக்கு மேல் தங்களது முடியை அளிக்க முன்வந்தனர். அதில் ஐந்து பேர் தங்களது மொத்த முடியையுமே மொட்டை அடித்துக்கொள்ள முன்வந்தனர். இதில் சிறப்பு என்னவென்றால் நாங்கள் யாரையும் முடி தானம் செய்யச் சொல்லி வற்புறுத்தவில்லை. அவர்களாகவேதான் விரும்பி முடியை கொடுத்தார்கள். இதற்கிடையில் மற்ற கல்லூரிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். எங்கள் அழைப்பை ஏற்று மற்ற கல்லூரி மாணவிகளும் வந்திருந்தனர். அன்பர்களே, கல்லூரி மாணவிகள் மட்டுமன்றி ஒரு ஆறு வயதுச் சிறுமிகூட தனது தலைமுடியை புற்றுநோயாளிகளுக்கென தானம் செய்திருப்பதை Youtubeல் பார்த்தோம். பிறர்மீது அன்பும் கருணையும் கொண்ட உள்ளங்கள் வாழ்க என மனதார வாழ்த்துவோம். நம் சமுதாயத்தில் கருணை உள்ளங்கள் பெருகட்டும் எனவும் கருணைக் கடவுளிடம் பிரார்த்தனையும் பண்ணுவோம்.

பிப்ரவரி 20, வருகிற வெள்ளி, உலக சமூக நீதி நாள். இந்த உலகில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே இடைவெளி அதிகமாக இருப்பதோடு, அந்த இடைவெளி வளர்ந்து வருகிறது என ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறுகிறது. சமூகத்தில் எல்லாருக்கும் நீதியும், நல்வாழ்வும், சமூகப் பாதுகாப்பும் கிடைக்க வேண்டும், ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களின் குரல்கள் கேட்கப்பட நாம் உறுதி செய்ய வேண்டும், பாலினப் பாகுபாடுகள் நீக்கப்பட வேண்டும் என, இந்த உலக நாளில் ஐ.நா. வலியுறுத்துகிறது. மனிதரில் கருணையும் அன்பும் இல்லாமல் இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமாகுமா என்பது கேள்வியே. உரோமை நகரில் வீடுகளின்றி தெருவில் வாழும் மனிதரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் குளித்து சுத்தமாக, மற்ற மனிதர் மத்தியில் மாண்புடன் நடமாடுவதற்கு உதவும் நோக்கத்தில் வத்திக்கானில் மூன்று இலவச குளியல் அறைகளும், ஒரு முடிதிருத்தும் நிலையம் இத்திங்களன்று திறக்கப்பட்டுள்ளன. கருணையுள்ளம் நிறைந்த தன்னார்வத் தொண்டர்கள் இதற்கு உதவுகிறார்கள். கருணை உள்ளங்கள் வாழட்டும்.

ஒருமுறை கோசலை நாட்டின் அரசனும் அரசியும் பகைவரின் படையெடுப்புக்குப் பயந்து ஓடிப்போய் ஒரு குயவர் வீட்டில் ஒளிந்துகொண்டார்கள். அங்கே அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுடைய பெயர் திகவு. ஆனால், சில ஆண்டுகளிலேயே கோசலை அரசர் ஒளிந்திருக்கும் இரகசியம் வெளியே தெரிந்துவிட்டது. கோசலை நாட்டு அரசரையும் அரசியையும் காசி அரசர் கைது செய்தார். இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை நிறைவேற்றப்பட்டபோது கோசலை அரசர், தனக்கு எதிரே இருந்த கூட்டத்தில் தன் மகனும் நிற்பதைக் கண்டார். தூக்கு மரத்தில் ஏறுவதற்கு முன் அவர் தன் மகனிடம், "வெறுப்பை அன்பினால் வெல்லலாம்" என்றார். திகவு வளர்ந்து நல்ல பாடகனாக மாறினார். அவருடைய புகழ் எங்கும் பரவியது. காசி மன்னர், திகவுவைத் தன்னுடைய அரசவையில் சேர்த்துக்கொண்டார். மெல்ல மெல்ல திகவு அரசரின் நன்மதிப்பைப் பெற்றார். உயர்ந்த பதவியும் கிடைத்தது. ஒரு நாள் திகவு, அரசருடன் வேட்டைக்குச் சென்றார். காட்டில் யாருமே இல்லாத ஓர் இடத்தில் அரசர் களைத்துப்போய் உறங்கிவிட்டார். திகவு தன் வாளை உருவி, "நீ என்னுடைய தாய்,தந்தையைக் காரணமில்லாமல் கொலை செய்தாய். இதோ உன்னையும் எமனிடம் அனுப்பிவிட முடியும்" என்று உரத்த குரலில் சொன்னார். அப்போது திகவுக்குத் தன்னுடைய தந்தை கடைசியாகக் கூறிய வார்த்தை, திடீரென்று நினைவுக்கு வந்தது. அவர் அரசரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். திகவுவுடைய இச்செயல் அரசரின் மனதை மாற்றியது. அவருக்கு உண்மை புரிந்தது. திகவுக்கு தன் அரச பதவியைக் கொடுத்துவிட்டுப் பதவியைத் துறந்தார். தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்துவைத்தார். இந்தக் கதையைக் கூறிய புத்தர், நாம் எப்போதும் திகவுபோல கருணை உள்ளத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று போதித்தார். அன்பு நெஞ்சங்களே, பிறர்மீது அன்பின்றி சுயநலமாக வாழ்பவர்கள் தங்களைத் தாங்களே உண்ணும் விலங்குகள் போன்றவர்கள் எனச் சொல்லப்படுகிறது. எனவே நாம் அன்பும் கருணையும் நிறைந்த மனிதர்களாய் வாழ்வோம். கருணை, நம்மிடமுள்ள அனைத்துத் தீமைகளையும் தகர்த்தெறியும். கருணை கொண்ட உள்ளம், கடவுள் வாழும் இல்லம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.