2015-02-16 16:29:00

கொல்லப்பட்ட காப்டிக் கிறிஸ்தவர்களின் குருதி சாட்சி சொல்கிறது


பிப்.16,2015. ஐ.எஸ். பயங்கரவாதிகள், லிபியாவில் 21 எகிப்திய காப்டிக் கிறிஸ்தவர்களைக் கொலை செய்துள்ளதற்கு இத்திங்களன்று தனது கண்டனத்தைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டபோது, இயேசுவே எனக்கு உதவும் என்று மட்டும்தான் சொல்லியுள்ளனர் என்றும், கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை.

இத்திங்களன்று தான் சந்தித்த ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளிடம் இவ்வாறு கூறிய திருத்தந்தை, கொல்லப்பட்ட காப்டிக் கிறிஸ்தவர்களின் குருதி உரக்கச் சாட்சி சொல்கிறது என்றும், கொல்லப்பட்ட இவர்கள் கத்தோலிக்கரா, ஆர்த்தடாக்ஸ் சபையா, காப்டிக் சபையா, லூத்தரன் சபையா என்பது முக்கியமல்ல, இவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும், இவர்கள் இரத்தம் ஒன்றே, இது கிறிஸ்துவை அறிவிக்கும் இரத்தம் என்றும், மறைசாட்சிகள் எல்லா சபைகளிலும் உள்ளனர் என்றும் கூறினார்.

கிறிஸ்துவை அறிவித்தற்காக இச்சகோதரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், இது கிறிஸ்தவ ஒன்றிப்பு இரத்தம், கிறிஸ்தவ ஒன்றிப்பை எட்டும் இலக்கில் இதில் கிறிஸ்தவர்கள் ஒருவர் ஒருவரை ஊக்கப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

எகிப்தின் Minyaவுக்கு அருகில் el-Aour கிராமத்தில் அன்னைமரியா ஆலயத்துக்கு வெளியே செபத்திற்காகக் கூடியிருந்தவேளை ஐ.எஸ். இஸ்லாமிய அரசோடு தொடர்புடைய பயங்கரவாதிகளால் பிடிக்கப்பட்டு, திரிபோலியில் ஒரு கடற்கரையில் வரிசையாக மண்டியிடச் செய்து, தலைமுடியை வெட்டுவதுபோல, ஒரே நேரத்தில் இந்த 21 பேரின் தலைகள் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.