2015-02-16 16:14:00

உதவி கேட்கும் ஏழைகளிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது


பிப்.16,2015. ஏழைகளின் எண்ணிக்கையும், அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும், அவர்களுக்கான ஒருமைப்பாட்டின் தேவையும், அதிகரித்துள்ள இன்றைய சூழல்களில், ஏழைகளுக்கு உதவுவதை தங்கள் அர்ப்பணமாகக் கொண்டிருக்கும் ‘Pro Petri Sede’ குழுவுக்கு தன் நன்றியை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க் நாடுகளைச் சேர்ந்த நல்மனம் கொண்ட மக்கள் இணைந்து நடத்தும் ‘Pro Petri Sede’ என்ற இவ்வமைப்பு, திருப்பீடத்தின் பிறரன்புப் பணிகளுக்கு உதவி வருவது குறித்து நன்றியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மிடம் உதவி கேட்டுவரும் ஏழைகளிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்றார்.

பாராமுகமும், சுயநலமும் நிறைந்து காணப்படும் உலகில், ஏழைகள் மீது காட்டப்படும் அக்கறைகள், நமக்கு தாழ்ச்சியையும் உண்மையையும் வெளிப்படுத்தி நம்மை வளப்படுத்துகின்றன என, இத்திங்களன்று காலை தன்னை வத்திக்கானில் சந்தித்த இவ்வமைப்பின் அங்கத்தினர்களிடம் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகள் மீது அக்கறை காட்டுவதோடு, அமைதிக்காகவும், பேச்சுவார்த்தைகளுக்காகவும், ஒப்புரவுக்காகவும் செபிக்க நாம் தவறக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.