2015-02-14 15:41:00

மூன்று அருளாளர்களைப் புனிதர்களாக உயர்த்துவதற்கு ஒப்புதல்


பிப்.14,2015. இச்சனிக்கிழமையன்று இருபது பேரை புதிய கர்தினால்களாக உயர்த்திய திருவழிபாட்டுக்குப் பின்னர், இந்தக் கர்தினால்கள் அவையில் மூன்று முத்திப்பேறு பெற்றவர்களை புனிதர்களாக உயர்த்துவதற்கும் ஒப்புதல் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற மே 17ம் தேதியன்று இவர்களின் புனிதர்பட்ட நிகழ்வு நடைபெறும் எனவும் அறிவித்தார் திருத்தந்தை.

முத்திப்பேறு பெற்றவர்களான Jeanne Emilie de Villeneuve, Mary of Jesus Crucified Baouardy, Marie Alphonsine Danil Ghattas ஆகிய மூன்று பெண்கள் பற்றிய விபரங்களை, திருத்தந்தையிடம் சமர்ப்பித்து, இவர்கள் புனிதர்களாக உயர்த்தப்பட அனுமதி கோரினார் புனிதர்கள் திருப்பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ.

1811ம் ஆண்டில் பிறந்த பிரான்ஸ் நாட்டவரான முத்திப்பேறு பெற்ற Jeanne Emilie de Villeneuve, சிறாருக்கும், ஏழைப் பெண்களுக்கும் கல்வி வழங்கவும், தூர நாடுகளில் நோயாளிகளைப் பராமரிக்கவும் அமலமரி சபையை நிறுவியவர். இவர் 1854ம் ஆண்டில் இறந்தார்.

முத்திப்பேறு பெற்ற Marie Alphonsine Danil Ghattas, 1843ம் ஆண்டில் எருசலேமில் பிறந்தவர். எருசலேம் புனித செபமாலை சகோதரிகள் சபையை நிறுவியவர். இவர் 1927ம் ஆண்டில் இறந்தார்.

முத்திப்பேறு பெற்ற Mary of Jesus Crucified Baouardy, நாசரேத்துக்கு அருகில், அபெலின் என்ற கலிலேயக் கிராமத்தில் 1846ம் ஆண்டில் பிறந்தார். 1878ம் ஆண்டில் பெத்லகேமில் இறந்த இவர், இந்தியாவில் கார்மேல் சபையைத் தொடங்குவதற்காக அனுப்பப்பட்டு அங்குப் பணிபுரிந்துள்ளார்.

ஆதாரம்:வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.