2015-02-14 15:14:00

திருத்தந்தை பிரான்சிஸ் - தலைமைப்பணி அன்பிலிருந்து பிறப்பது


பிப்.14,2015. உரோம் திருஅவையோடு எவ்வளவுக்கு அதிகமாக நாம் ஒன்றிணைந்திருக்கிறோமோ, அவ்வளவுக்கு அதிகமாக நாம் தூய ஆவியாருக்குப் பணிவுள்ளவர்களாக மாற வேண்டும், அதன்மூலம், நாம் இருப்பதற்கும், நாம் செய்வது அனைத்துக்கும் அன்பு வடிவையும் பொருளையும் கொடுக்கும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சனிக்கிழமை காலை 11 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், 18 நாடுகளின் ஆயர்கள், பேராயர்கள் என இருபது பேருக்கு, சிவப்பு தொப்பியும் மோதிரமும் வழங்கி கர்தினால்களாக உயர்த்திய திருவழிபாட்டில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால்கள் பதவி நன்மதிப்பாக நோக்கப்படாமல், அன்புக்குத் தலைமை ஏற்பதாய்க் கருதப்படுமாறும்  கூறினார்.

பவுலடிகளார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடல் 13ம் பிரிவில் விவரித்துள்ள அன்பை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும், அனைத்தையும் நம்பும், அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும் என்ற திருச்சொற்களை விளக்கினார்.

கர்தினால்களின் ஆன்மீக மற்றும் மேய்ப்புப்பணிக்கு நான்கு சொற்கள் முக்கியம் என்றும், நாம் எப்போதும் இறைவனில் முழுநம்பிக்கை வைத்திருப்பதால்,  மன்னிப்பதற்கும், நம்புவதற்கும் எப்பொழுதும் தயாராய் இருக்கும் மனிதர்களாக வாழுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இன்னும், நாம் எப்போதும் இறைவனில் முழுபற்றுக் கொண்டிருப்பதால், பற்றுறுதிக்குத் தூண்டுகோலாகவும், ஒவ்வொரு சூழலையும், நம் சகோதர சகோதரிகளையும் பொறுமையோடு தாங்கிக் கொள்ளவும் எப்பொழுதும் தயாராய் இருப்பவர்களாக வாழுமாறும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் பாவங்களை அன்புடன் சுமந்துகொண்ட கிறிஸ்துவில் ஒன்றித்து இவ்வாறு வாழுமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, திருஅவையின் நிர்வாகத்துக்குத் தொண்டு செய்பவர்கள் உறுதியான நீதி உணர்வு கொண்டிருக்குமாறும், இதன்மூலம், அநீதிகளின் அனைத்து வடிவங்களையும், அவை தனக்கோ திருஅவைக்கோ நன்மையைக் கொண்டுவந்தால்கூட அவற்றை ஏற்காதவர்களாக வாழ முடியும் என்று கூறினார்.

அன்பு, இழிவானதைச் செய்யாது, தன்னலம் நாடாது, எரிச்சலுக்கு இடம் கொடாது, தீங்கு நினையாது என்ற திருச்சொற்களையும் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, எரிச்சல்படுவதற்கும் கோபம் கொள்வதற்கும் நிறைய வாய்ப்புகள் வரும், உடன் வாழ்வோரோடு உறவுகளில் எரிச்சல் அடைய நேரிடும், அப்பொழுது அன்பு மட்டுமே நம்மை விடுதலையாக்கும் எனவும் கூறினார்.

அன்பு பொறுமையுள்ளது, நன்மை செய்யும், பொறாமைப்படாது, தற்புகழ்ச்சி கொள்ளாது, இறுமாப்பு அடையாது போன்ற திருச்சொற்களையும் விளக்கிய திருத்தந்தை, அன்பில் வாழ்பவர்கள் தன்னலமின்றி இருப்பார்கள் என்றும் கூறினார்.

ஆதாரம்:வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.