2015-02-14 15:56:00

8வது உலக குடும்பங்கள் மாநாட்டில் ஈரான் பிரதிநிதிகள் குழு


பிப்.14,2015. வருகிற செப்டம்பரில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிலடெல்ஃபியாவில் நடைபெறும் 8வது உலக குடும்பங்கள் மாநாட்டில் ஈரானிலிருந்து பிரதிநிதிகள் குழு ஒன்று கலந்துகொள்ளும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் அறிவித்தார்.

ஈரான் உதவி அரசுத் தலைவர் Shahindokht Molaverdi அவர்கள், ஈரான் பிரதிநிதிகள் குழுவுடன் இவ்வாரத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்ததன் பயனாக, பிலடெல்ஃபியாவில் நடைபெறும் உலக குடும்பங்கள் மாநாட்டில் ஈரான் பிரதிநிதிகள் குழு ஒன்று கலந்துகொள்ளும் என்று திருப்பீட குடும்ப அவைத் தலைவர் பேராயர் Vincenzo Paglia அவர்கள் அறிவித்தார்.

வத்திக்கானில் இடம்பெற்ற அச்சந்திப்பில், பெண்கள் மற்றும் குடும்பம் குறித்தும் இவ்விரு தரப்பும் விவாதித்தாகவும் பேராயர் Paglia அவர்கள் கூறினார்.

குடும்பம் என்பது கத்தோலிக்கப் பாரம்பரியச் சொத்து அல்ல, இது உலகின் பாரம்பரியச் சொத்து என்றும் கூறினார் பேராயர் Paglia.

மேலும், வத்திக்கானில் இடம்பெற்ற அச்சந்திப்பு பற்றிப் பேசிய ஈரான் உதவி அரசுத் தலைவர் Shahindokht Molaverdi அவர்கள், குடும்பம் சார்ந்த முக்கியமான விவகாரம் குறித்துப் பேசியது மிகவும் சிறப்பாக இருந்ததெனக் கூறினார். 

ஆதாரம்: AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.