2015-02-13 15:42:00

திருஅவையில் இருபது புதிய கர்தினால்கள்


பிப்.13,2015. இச்சனிக்கிழமை காலை 11 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் புதிய கர்தினால்களுக்கு சிவப்பு தொப்பியும் மோதிரமும் வழங்கும் திருவழிபாட்டை நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகின் 18 நாடுகளின் ஆயர்கள், பேராயர்கள் என இருபது பேரை கர்தினால்களாக உயர்த்தி அவர்களை கன்சிஸ்டரி என்ற கர்தினால்கள் அவையுடன் இணைப்பார் திருத்தந்தை. மியான்மார், பசிபிக் நாடாகிய டோங்கா, கேப் வெர்தே ஆகிய நாடுகள் முதன்முறையாக கர்தினால்களைப் பெறுகின்றது.

மேலும், இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், புதிய கர்தினால்களுடன் சேர்ந்து கூட்டுத் திருப்பலியும் நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இவ்வியாழன், இவ்வெள்ளி தினங்களில் வத்திக்கானில் உலகின் கர்தினால்களுடன் கூட்டம் ஒன்றை நடத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். இதில், திருஅவையிலுள்ள 227 கர்தினால்களுள் 165 கர்தினால்கள் கலந்துகொண்டனர். மற்றவர்கள் வயது மற்றும் நோயின் காரணமாக இதில் கலந்துகொள்ள இயலவில்லை. இவ்வெள்ளி முற்பகலுடன் நிறைவு பெறுவதாய் திட்டமிடப்பட்டிருந்த இந்தக் கூட்டம் மாலையிலும் தொடர்ந்து நடந்தது. திருப்பீட தலைமையகச் சீர்திருத்தம் குறித்த தலைப்பில் இக்காலை அமர்வோடு நாற்பது கர்தினால்கள் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர் என்றும், உலகில் திருஅவை இன்னும் சிறப்பாக எவ்வாறு பணிபுரியலாம் என்பது குறித்த பகிர்வுகள் மிகவும் மனம்திறந்த சூழலில் இடம்பெற்றன என்றும் திருப்பீட செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.  

ஆதாரம்:வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.