2015-02-12 15:58:00

திருப்பீட கட்டமைப்பு மாற்றங்கள் எளிதானவை அல்ல - திருத்தந்தை


பிப்.12,2015 'சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது' என்று திருப்பாடல் ஆசிரியர் கூறும் சொற்களைக் கொண்டு நாம் இறைவனுக்கு நன்றி சொல்வோம் என்ற வார்த்தைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலையில் தன் சகோதரக் கர்தினால்களைச் சந்தித்தார்.

பிப்ரவரி 12, 13 ஆகிய இரு நாள்கள் நடைபெறும் ஒரு கூட்டத்திற்கு, உலகெங்கிலுமிருந்து வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள கர்தினால்களை வரவேற்றத் திருத்தந்தை, கர்தினால்கள் அவையில் புதிதாக இடம்பெறவிருக்கும் 20 கர்தினால்களை தனிப்பட்ட வகையில் வரவேற்று, தன் உரையைத் துவங்கினார்.

திருப்பீட உயர்மட்ட அலுவலகக் கட்டமைப்புக்களில் மாற்றங்களைக் கொணரும் நோக்கத்துடன் தன்னுடன் ஆலோசனைகளில் ஈடுபட்டுவரும் 9 கர்தினால்களுக்கு தன் நன்றியைக் கூறியத் திருத்தந்தை, திருப்பீட கட்டமைப்பு மாற்றங்கள் திருஅவையின் தலைமைப் பணிகளில் இன்னும் ஆழ்ந்த ஒருங்கிணைப்பை உருவாக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

இந்த மாற்றங்கள், தன்னிலேயே நிறைவடைவதில்லை, மாறாக, இம்மாற்றங்களால் கிறிஸ்தவ சாட்சிய வாழ்வு இவ்வுலகிற்கு மேலும் தெளிவாகவேண்டும் என்றும், கிறிஸ்தவ சபைகளிடையே இன்னும் ஆழமான ஒற்றுமை வளரவேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

துவக்கப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் எளிதானவை அல்ல என்பதைக் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாரின் துணையுடன் உண்மையான தேடலில் அனைவரும் ஈடுபடவேண்டும் என்றும் கர்தினால்கள் கூட்டத்தில் வழங்கிய துவக்க உரையில் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.