2015-02-12 16:30:00

இந்தியாவின் போத் கயாவில் பல்சமய உரையாடல்


பிப்.12,2015 திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் பிரதிநிதிகளும், புத்த மதத்தின் பல்வேறு கிளைகளைச் சார்ந்த பிரதிநிதிகளும் இணைந்து, பிப்ரவரி 11 புதன் முதல் இவ்வெள்ளி முடிய இந்தியாவில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று வருகின்றனர்.

குடும்பங்கள் மற்றும் பல்சமய உரையாடல் ஆகியவற்றை மையப்படுத்தி நடைபெறும் இக்கருத்தரங்கு, புத்தர்களின் முக்கியத் தலமான போத் கயாவில் நடைபெறுகிறது.

இச்சந்திப்பிற்குப் பின், திருப்பீடப் பிரதிநிதிகள், இந்தியாவின் மற்றொரு புண்ணியத் தலமான வாரணாசியில், இந்து மற்றும் இஸ்லாமியப் பிரதிநிதிகளுடன் மற்றொரு கருத்தரங்கில் கலந்துகொள்வர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இச்சந்திப்புக்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆசிய ஆயர் பேரவைகளின் பல்சமய உரையாடல் பணிக்குழுவின் தலைவர், வசாய் ஆயர் பீலிக்ஸ் மச்சாடோ அவர்கள், குடும்பங்கள், குழந்தை வளர்ப்பு ஆகிய கருத்துக்களை அனைத்து உண்மையான மதங்களும் உயர்வாகக் கருதுகின்றன என்று கூறினார்.

சமுதாய நெருக்கடிகளால் சிதறியுள்ள குடும்பங்களில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் இச்சந்திப்புக்களில் முக்கியமாக இடம்பெறும் என்றும் ஆயர் பீலிக்ஸ் மச்சாடோ அவர்கள் கூறினார்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.