2015-02-12 16:22:00

இத்தாலியக் கடலில் நிகழ்ந்த மரணங்கள், ஐரோப்பாவின் தோல்வி


பிப்.12,2015 இத்திங்களன்று இத்தாலிக்கு அருகே கடலில் நிகழ்ந்த மரணங்கள், ஐரோப்பிய சமுதாயத்தை மீண்டும் ஒருமுறை தோல்வியுறச் செய்துள்ளது என்று கத்தோலிக்க நீதி, மற்றும் பிறரன்புப் பணிகள் அமைப்பைச் சேர்ந்த பலர் கூறியுள்ளனர்.

லிபியாவிலிருந்து புறப்பட்ட ஒரு பாதுகாப்பற்ற கலன், இத்தாலியின் லாம்பதூசாவை அடைவதற்கு முன் இத்திங்கள் இரவு கடலில் மூழ்கி, 300க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் காப்பாற்றப்பட்ட ஒன்பது பேர், குளிருக்கு எதிராக எவ்வித பாதுகாப்பும் அளிக்கப்படாததால் மரணமடைந்தனர் என்ற செய்தி, மேலும் அதிர்ச்சியைத் தருகிறது என்று இயேசு சபையினர் நடத்தும் புலம்பெயர்ந்தோர் பணிக்குழு கூறியுள்ளது.

கடலில் பயணிக்கும் புலம் பெயர்ந்தோர் குறித்த முடிவுகளை எடுக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரான Brusselsலிருந்து உத்தரவு வரும்வரை இத்தாலிய அரசு காத்திருந்தால், பல்லாயிரம் அப்பாவி உயிர்கள் நம் கண்முன்னே இறக்கும் கொடுமைக்கு நாம் பதில் சொல்லவேண்டியிருக்கும் என்று ‘சாந்த் எஜிதியோ’ அமைப்பை உருவாக்கிய ஆந்த்ரேயா ரிக்கார்தி அவர்கள் கூறினார்.

தங்கள் நாடுகளில் நிலவும் வன்முறைகளிலிருந்து தப்பித்து வரும் புலம்பெயர்ந்தோருக்கு வாழ்வளிக்கும் வழிமுறைகளை இத்தாலிய ஒன்றியம் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை, JRS எனப்படும் இயேசு சபை புலம்பெயர்ந்தோர் அமைப்பினர் விடுத்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.