2015-02-12 16:12:00

C 9 கர்தினால்கள் குழுவுடன் அடுத்தச் சந்திப்பு ஏப்ரல் 13-15


பிப்.12,2015 ஒன்பது கர்தினால்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்கள் முதல் புதன் முடிய வத்திக்கானில் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டங்களில், திருப்பீடக் கலாச்சார அவை, பொருளாதாரத் துறை, மற்றும் சமூகத் தொடர்புத் துறை ஆகியவை குறித்த மாற்றங்கள் பேசப்பட்டன என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், இயேசு சபை அருள்பணி பெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த ஆலோசனைக் கூட்டங்களில் பேசப்பட்டக் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையொன்று, இவ்வியாழன், வெள்ளி ஆகிய இருநாட்கள் நடைபெறும் அனைத்துக் கர்த்னால்களின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, மேலும் கருத்துப் பகிர்வுகள் இடம்பெறும் என்றும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் எடுத்துரைத்தார்.

C 9 எனப்படும் கர்தினால்கள் குழுவுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் அடுத்தச் சந்திப்பு, ஏப்ரல் 13 முதல் 15 முடிய நடைபெறும் என்றும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் அறிவித்தார்.

இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பின்ஸ் நாட்டில் மேற்கொண்ட பயணத்தின்போது, அவர்மீது கொலை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது என்று ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும், மணிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் அளித்த உறுதியின்படி இதனைத் தான் தெரிவிப்பதாகவும் இப்புதன் மாலையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தின் இறுதியில், அருள்பணி லொம்பார்தி அவர்கள் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.