2015-02-11 16:19:00

பாலியல் வன்கொடுமைகள், நவீன அடிமைத்தனத்தின் ஒரு வெளிப்பாடு


பிப்.11,2015 போர்களில் ஈடுபட்டிருக்கும் நாடுகள், பாலியல் வன்கொடுமைகளை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும்போது, இதனால் பாதிக்கப்பட்டோர் தங்கள் வாழ்நாள் முழுவதும் இக்கொடுமைகளின் காயங்கள் ஆறாமல் வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்று இங்கிலாந்து கர்தினால் ஒருவர் கூறினார்.

'போர்ச் சூழலில் பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்தல்' என்ற கருத்தில் இலண்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய Westminster பேராயர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள், பாலியல் வன்கொடுமைகள், நவீன அடிமைத்தனத்தின் ஒரு வெளிப்பாடு என்று எடுத்துரைத்தார்.

எந்தச் சூழலிலும் பாலியல் வன்கொடுமைகள் நன்னெறிக்கு முரணான ஒரு குற்றமே என்பதை வலியுறுத்திக் கூறிய கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், போர்ச்சூழலில் இக்கொடுமையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது, இக்குற்றத்தை மேலும் கொடுமையாக்குகிறது என்று தெளிவுபடுத்தினார்.

இக்கொடுமையை நீக்க மனசாட்சியுள்ள அனைத்து மதத்தினரும் உழைக்கின்றனர் என்பதை எடுத்துரைத்த கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், குறிப்பாக, இக்கொடுமையில் சிக்கியவர்களுக்கு அருள் சகோதரிகள் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.