2015-02-11 15:41:00

நோயுற்றோர் உலக நாளையொட்டி வத்திக்கான் நிகழ்வுகள்


பிப்.11,2015 பிப்ரவரி 11, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட 23வது நோயுற்றோர் உலக நாளையொட்டி, இச்செவ்வாய் மாலை, உலகமெங்கும் நலப்பணிகளில் ஈடுபட்டோருக்காக, குறிப்பாக, எபோலா நோயில் பாதிக்கப்பட்டவர்கள் நடுவே பணியாற்றி இறையடி சேர்ந்தவர்களுக்காக வத்திக்கானில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

23வது நோயுற்றோர் உலக நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள "Sapientia Cordis" அதாவது, 'இதயத்தின் அறிவாற்றல்' என்ற செய்தியை மையப்படுத்தி, உலகின் அனைத்து கத்தோலிக்க மறைமாவட்டங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று திருப்பீட நலப்பணியாளர் அவை அறிவித்துள்ளது.

நோயுற்றோர் உலக நாளையொட்டி, இப்புதனன்று புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் கர்தினால் Agostino Vallini அவர்கள் தலைமையேற்று நடத்திய ஒரு சிறப்புத் திருப்பலி நிகழ்ந்தது.

1992ம் ஆண்டு மேமாதம் 13ம் தேதியன்று திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள், பிப்ரவரி 11ம் தேதியை, நோயுற்றோர் உலக நாளாக அறிவித்து, மடல் ஒன்றை வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.