2015-02-11 15:08:00

திருத்தந்தையின் மறைக்கல்வி : குடும்பத்தில் குழந்தைகளின் இடம்


பெப்.11,2015. குளிர்காலத்திற்குரிய சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருக்க, அதையும் தாண்டி சூரியனின் ஒளிக்கதிர்கள் உலகை நோக்கி தன் இதமான வெப்பத்தைச் சுமந்துவர, இளவெப்பமும் மிதமான குளிரும் கலந்த ஒரு கால நிலையில், திருத்தந்தையின் இவ்வார புதன் மறைக்கல்வி உரை, தூய பேதுரு பேராலய வளாகத்தில் இடம்பெற்றது. இந்த ஆண்டின் துவக்கத்தில், குடும்பம் குறித்த புதிய தொடரை புதன் மறைக்கல்வி உரையில் வழங்கத் துவங்கிய திருத்தந்தை,  அன்னை, தந்தை குறித்த மறைக்கல்வி உரைகளை கடந்த வாரங்களில் வழங்கியுள்ளதைத் தொடர்ந்து இப்புதனன்று, குடும்பத்தில் குழந்தைகளின் இடம் குறித்து எடுத்துரைத்தார்.

குடும்பம் குறித்த நம் மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக இன்று நாம், குடும்பங்களில் குழந்தைகளின் முக்கியத்துவம் மற்றும் பங்கு குறித்து நோக்குவோம். "உன் குழந்தைகள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்: தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்: உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்: உன் இதயம் வியந்து விம்மும்"(எசாயா 60,4-5a) என இறைவாக்கினர் எசாயா நூலில் வாசிக்கின்றோம். இப்பகுதி, குழந்தைகள் தங்கள் பெற்றோருக்குக் கொணரும் மகிழ்வு மற்றும் நம்பிக்கை பற்றிக் கூறுகின்றது. பெற்றோர்களின் அன்பின் கனியாகவும், இறைவனின் கொடையாகவும் குழந்தைகள் உள்ளனர். இறைவனுக்கேயுரிய தனிப்பட்ட அன்பானது, இவ்வுலகிற்கு வரும் ஒவ்வொரு குழந்தையின் மீதும் மீறமுடியா மாண்பையும் மதிப்பையும் பொழிகிறது. 'உன் தந்தையையும் தாயையும் மதித்து நட' என இறைவன் வழங்கியுள்ள நான்காவது கட்டளை, நம் பெற்றோருக்கு வழங்கவேண்டிய மதிப்பைப் பற்றிக் கூறுவதுடன், தலைமுறைகளுக்கு இடையே இருக்கும் இந்த உறவில் காணப்படும் புனித இணைப்பையும்,  அந்த இணைப்பு நம் ஏனைய உறவுகளிலும் நல்பாதிப்புகளை ஏற்படுத்தி, சமூக முழுமைக்கும் நல்லதொரு வருங்காலத்தை உறுதி செய்வதையும் காண்கிறோம். இறைவன் வழங்கும் வாழ்வு என்னும் கொடை, தாராளமனதுடனும் பொறுப்புணர்வுடனும் முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பது குறித்த திருஅவையின் அக்கறை, இவ்வாறு,  சமூக நலனோடு தொடர்புடையது. இந்த சமூக நலன், இளையோரின் இருப்பால் பலப்படுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு வளப்படுத்தப்படுகின்றது. இளையோர் தங்கள் வருங்காலத்தை மகிழ்வுடனும் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் நோக்குவதற்கு உதவும் நம் பொறுப்புணர்வுகளிலும், குடும்ப மாண்பையும் வாழ்வு எனும் கொடையையும் மதிப்பதிலும், இறைமகனும் மனிதக் குடும்பத்தின் மகனுமாகிய இயேசு நமக்கு உதவுவாராக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மை லாம்பதூசா விபத்து குறித்த தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார். இத்தாலிக்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற புலம்பெயர்ந்தோருள் ஏறத்தாழ 300பேர் கடுங்குளிருக்குப் பலியாகியுள்ளது குறித்து தன் ஆழ்ந்த கவலையை தெரிவித்ததோடு, அவர்களுக்கான செபங்களுக்கும், கரையேறியுள்ள மக்களுக்கான உதவிகளுக்கும் உருக்கமாக அழைப்புவிடுத்தார் திருத்தந்தை. இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.