2015-02-11 16:32:00

ISIS அடக்குமுறைகளைத் தடுக்க, அரசுகளின் தலையீடு தேவை


பிப்.11,2015 ISIS இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவின் அடக்குமுறைகளைத் தடுக்க, பன்னாட்டு அரசுகளின் தலையீடு மிக அவசரத் தேவையாக உள்ளது என்று Erbil நகரில் பணியாற்றும் கல்தேய வழிபாட்டு முறை பேராயர் Bashar Warda அவர்கள் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விண்ணப்பித்தார்.

IS இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவினரால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களின் நிலையை விளக்கிக் கூறிய பேராயர் Warda அவர்கள், பன்னாட்டு இராணுவத்தினர் மேற்கொள்ளும் வான்வழித் தாக்குதல்கள் மட்டும் போதாது என்று கூறினார்.

ISIS தீவிரவாத அமைப்பில் இணைவதற்கு இளையோர் பலர் முன்வருவதால், இத்தீவிரவாத அமைப்பின் சக்தி கூடிவருகிறது என்பதை எடுத்துரைத்த பேராயர் Warda அவர்கள், இந்தச் சக்தியைக் குறைக்க அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

இதற்கிடையே, ISIS அமைப்பில் அண்மைய நாட்களில் 20,000த்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ISIS அமைப்பினர் சமூக வலைத்தளங்களில் மேற்கொண்டு வரும் விளம்பர முயற்சிகளும், மேற்கத்திய நாடுகளின் இளையோர், ஆபத்தை விரும்பித் தேடும் போக்கும் இந்த எண்ணிக்கை வளர்ச்சிக்குக் காரணம் என்று ஆசிய செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.