2015-02-09 15:09:00

வாரம் ஓர் அலசல் – மனித வர்த்தகம், வெட்கத்துக்குரிய காயம்


பிப்.09,2015. இலங்கையில் வாழும் கைம்பெண் இரஞ்சிதா வர்ணகுலசூரியா, மூன்று குழந்தைகளுக்குத் தாய். 37 வயதான இவர், வேலைதேடி வெளிநாடு சென்ற தனது அனுபவத்தை ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்டுள்ளார்....

நோயால் தாக்கப்பட்ட எனது கணவரின் மருத்துவத்துக்கு எனது சேமிப்பு அனைத்தையும் செலவிட்டேன். சிகிச்சை பலனளிக்கவில்லை. அவர் 2011ம் ஆண்டில் இறந்தார். எனது இரண்டு பெண் குழந்தைகளையும், ஓர் ஆண் பிள்ளையையும் காப்பாற்றவேண்டிய இக்கட்டான சூழல். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு எனது தாயும், இரு சகோதரர்களும் எனக்கு உதவி செய்தனர். ஆனால் தொடர்ந்து அவர்களுக்குப் பாரமாக இருக்க விரும்பாமல் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல விரும்பினேன். 2012ம் ஆண்டில் எனது கணவரின் பழைய நண்பர் கீர்த்தி என்பவரை தற்செயலாகச் சந்தித்தேன், எனது நிலைமையையும் விளக்கினேன்.  வாடகைக் கார் ஓட்டும் இவர், கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு அடிக்கடி வெளிநாட்டவரை அழைத்துச் செல்பவர். எனக்கு வெளிநாட்டில் வேலை தேடித் தருவதாக இவர் உறுதி அளித்தார். தனியே செல்ல விரும்பாமல், மாலதி விஷ்வா என்ற 39 வயதுப் பெண்ணையும் எப்படியோ சம்மதிக்க வைத்து இருவரும் கீர்த்தி என்பவரின் உதவியால் வெளிநாட்டுக்குப் புறப்பட்டோம். ஆனால் அவர் எங்கள் இருவரிடமிருந்து ஆளுக்கு பத்து இலட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டார். எனது வீட்டையும், எனது தாயின் தங்க வளையல்களையும் அடமானம் வைத்து, எனது சகோதரர்களின் உதவியுடன் பணத்தைச் செலுத்தினேன். இரு குழந்தைகளுக்குத் தாயான மாலதியும் இதே மாதிரிதான் பணத்தைப் புரட்டினார். நாங்கள் தாய்லாந்தில் சென்றிறங்கினோம். அங்கு ஒரு பயணியர் விடுதியில் ஒரு சிறிய அறைக்குள் மற்ற பெண்களோடு ஒரு வாரத்துக்கு நாங்கள் பூட்டி வைக்கப்பட்டோம். பின்னர் ஒரு மனிதர் எங்களிடம் வந்து, ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் எங்களால் வேலை செய்ய முடியும், ஒரு நாளில் எவ்வளவு சம்பாதிக்க விரும்புகிறோம், வெள்ளையரா அல்லது கலப்புநிற மனிதர் தேவையா என கேட்டார். அடுத்த நாள் நானும், மாலதியும் மங்கலான வெளிச்சம் உள்ள தனித்தனி அறைகளுக்கு அனுப்பப்பட்டோம். எனது அறையில் ஒரு மனிதர் நுழைந்தார். அப்போது எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. பயத்தால் மயங்கி வீழ்ந்தேன். அதற்குப் பின்னர் நடந்ததை என்னால் விவரிக்க முடியாது. இச்செயலுக்கு மறுக்க முயற்சித்த பெண்களின் அலறல் சப்தத்தை மற்ற அறைகளில் கேட்க முடிந்தது. மாதம் ஒருமுறை எங்கள் வீட்டுக்குத் தொலைபேசியில் பேச அனுமதி கிடைத்தது. எதையோ பேசி சமாளித்தோம். ஒருநாள் முதலாளியிடம் சென்று, ஊரில் எங்கள் தாய்மார் இறந்துவிட்டனர். அவர்கள் அடக்கத்துக்குப் போய்விட்டு, நிச்சயமாக திரும்பி வந்துவிடுவோம் என்று சொன்னோம். அனுமதியும் தந்தனர். ஆனால் அதன் பின்னர் உடைகளோ பணமோ தருவதை நிறுத்தி விட்டனர். இங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில் நாங்கள் வெறுங்கையுடன் இலங்கை திரும்பினோம். எல்லாவற்றையும் இழந்தது மட்டுமல்லாமல் கடனையும் கட்ட வேண்டிய சூழல். நல்ல உள்ளம் கொண்ட எங்கள் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொண்டிருப்போம். எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பினோம், ஆனால் பாலியல் மனித வியாபாரத்துக்குப் பலியாகிவிட்டோம். அதை இப்பொழுது நினைத்தாலும் எங்களால் கிரகிக்க முடியவில்லை....

 அன்பு நெஞ்சங்களே, இரஞ்சிதா, மாலதி போன்று உலகின் எல்லா நாடுகளிலும் எத்தனையோ ஏழைப் பெண்களும் சிறுமிகளும் ஏமாற்றப்பட்டு இந்த மனித வர்த்தகத்தில் கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றனர். கடும் வறுமையிலும், போதிய கல்வியறிவும் வேலையும் இல்லாமலும் இருப்பதால், சிறுமிகள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு ஏமாற்றி அழைத்து வரப்பட்டு மனித வர்த்தகக் கூண்டில் சிக்கிக் கொள்கின்றனர். உலகில் நவீன அடிமைகளாக வேலை செய்யும் மூன்று கோடிப் பேரில் பாதிப்பேர் இந்தியர்கள் என்று ஆஸ்திரேலியாவில் இயங்கும் Walk Free அமைப்பு கூறியுள்ளது. இந்தியாவில், பெரும்பாலும், கிழக்கிந்தியாவிலிருந்து, மிகவும் ஏழைக் குடும்பங்களிலிருந்து சிறுமிகள்  நகரங்களுக்கு அழைத்து வரப்பட்டு முதலில் 120 டாலருக்கும், பின்னர் 600 முதல் 700 டாலர் வரையும் வீட்டு வேலைக்கு விற்கப்படுகின்றனர். இந்தச் சிறுமிகள் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை வேலை செய்கின்றனர். ஆனால் ஊதியம் எதுவும் இவர்களிடம் கொடுக்கப்படுவதில்லை. இச்சிறுமிகளில் பலர் பாலியல் முறையிலும் பயன்படுத்தப்படுகின்றனர் என்று இவ்வமைப்பின் ஆய்வு கூறுகிறது.

புதுடெல்லியின் Safdarjung மருத்துவமனையில் ஆறு பெண்கள் உள்ள அறையில் 15 வயதுச் சிறுமி ஒருவர், முகத்திலும் தலையிலும் கட்டுகளுடன் படுத்திருந்தார். அவரது கண்களும் வீங்கிய உதடுகளுமே வெளியில் தெரிந்தன. அவரது கழுத்து முதல், உடம்பு முழுவதும் தீக்காயங்களும், அடிபட்ட சிவப்புநிறத் தழும்புகளும் காணப்பட்டன. காதின் ஒரு பகுதி தொங்கிக் கொண்டிருந்தது. அச்சிறுமியின் மண்டையிலுள்ள காயம் அழுகி கிருமிகளால் நிறைந்திருந்தது. இதனால் அச்சிறுமியைச் சுற்றி ஒருவித துர்நாற்றம் வீசியது. அச்சிறுமி தடுமாற்றக் குரலில் சொன்னார் - எனது முதலாளி பெருக்குமாறாலும், முக்காலியாலும் தினமும் அடிப்பார், எனது உடம்பில் பல தடவைகள் சூடான சட்டியை வைப்பார், எனது தோல்கள் எரியும். இதனாலே எனது தலையிலுள்ள தோல் உரியத் தொடங்கியது என்று. மேலும், 16 வயது சிறுமி மஞ்சு, 12 வயதில் மனித வர்த்தகத்துக்குப் பலியானவர். டெல்லியில் நல்ல வேலை தருவதாகச் சொல்லி அழைத்துவந்த மனித வர்த்தகர் ஒருவர், வயதான ஒரு மனிதரிடம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விலை பேசினார். ஆனால் அம்மனிதாரல் கொடுக்க இயலவில்லை. எனவே கோபமடைந்த அந்த வர்த்தகர், மஞ்சுவை அந்த இரவில் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி, அடுத்த நாள் காலையில் 35 ஆயிரம் ரூபாய்க்கு வீட்டு வேலைக்கு விற்றுள்ளார். மஞ்சு ஊர் திரும்ப ஆசைப்பட்டதால் அந்த ஆளும் மஞ்சுவை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி விட்டார்.

இந்த 21ம் நூற்றாண்டிலும் இத்தகைய மனித வர்த்தகங்கள். இந்த மனித வர்த்தகக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருஅவையின் பல்வேறு அமைப்புகள் உதவி வருகின்றன. உரோமையில் பல அருள்சகோதரிகள் இரவில் சாதாரண உடைகளில் சென்று, இதற்கு அடிமையாகியுள்ள பெண்களைக் காப்பாற்றி அவர்களுக்கு உதவி வருகின்றனர். இந்தக் கொடுமைக்குப் பலியாகும் மனிதர்களுக்காகச் செபித்து இவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவற்கு, அனைத்துலக ஆண்-பெண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பு உலக செப நாளை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்க அடிமைப் பெண்ணாகிய புனித ஜோஸ்பின் பக்கித்தா விழாவான பிப்ரவரி 8ம் தேதியை அந்த நாளாகவும் அறிவித்துள்ளது. அதன்படி இஞ்ஞாயிறன்று இந்த முதல் உலக செப நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த உலக நாள் பற்றி இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித வர்த்தகம் வெட்கத்துக்குரிய காயம், இச்செயல், நாகரீகமான ஒரு சமுதாயத்துக்கு ஏற்றதல்ல என்று, மனித வர்த்தகத்துக்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டார்.

இஞ்ஞாயிறன்று வத்திக்கான் வளாகத்தில் நண்பகலில் நின்றுகொண்டிருந்த ஏறக்குறைய ஐம்பதாயிரம் விசுவாசிகள், திருத்தந்தையின் இக்கூற்றை ஏற்பதாக கைகளைத் தட்டினர். தொழிலின் கருவிகளாக அல்லது பாலியல் இன்பத்துக்காக அடிமைகளாக வைக்கப்பட்டு, உரிமைகளை இழந்து சித்ரவதைக்கு உள்ளாகும் பெண்களுக்கும் சிறாருக்கும் உதவிவரும் மக்களை ஊக்கப்படுத்துகிறேன். வெட்கப்பட வேண்டிய இந்நடவடிக்கையை அகற்றுவதற்குப் பொறுப்பான அரசுகள் தீர்மானமாகச் செயல்படும் என நம்புகிறேன். தங்களின் மாண்பை இழக்கும் இவர்களின் குரல்களாக நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். 1869ம் ஆண்டு சூடானின் தார்பூர் மாநிலத்தில் பிறந்த புனித பக்கித்தா, தனது குடும்பத்துடன் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது கடத்தப்பட்டு விற்கப்பட்டார். இச்சிறுமி பயத்தால் தனது பெயரைச் சொல்லாமல் இருந்ததால், அரபுமொழியில் “நல்வாய்ப்புடையவள்” என்று பொருள்படும் “Bakhita” என கடத்தல்காரர்கள் பெயரிட்டனர். இச்சிறுமி ஐந்து தடவைகள் விற்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். ஒரு முதலாளி, பக்கித்தா உடலில் 114 தடவைகள் வெட்டுக் காயங்களை ஏற்படுத்தி அவற்றில் உப்பையும் தடவி இருக்கிறார். கடைசியாக, Khartoum நகரில் இத்தாலியத் தூதரக அதிகாரி Callisto Legnani என்பவர் இச்சிறுமியை விலைக்கு வாங்கி, இரு ஆண்டுகள் கழித்து இத்தாலிக்கு அழைத்து வந்தார். அங்கு வெனிஸ் நகரில் கிறிஸ்தவம் பற்றி அறிந்து திருமுழுக்குப் பெற்று ஜோஸ்பின் மார்கிரட் என்ற பெயரையும் ஏற்றார் பக்கித்தா. பின்னர் கனோசியன் சகோதரிகள் சபையில் சேர்ந்து 1947ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி இறந்தார். சூடானின் பாதுகாவலராகவும் இருக்கிறார் அடிமைப்பெண் புனித பக்கித்தா. 

அன்பு நேயர்களே, மனித வர்த்தக வணிகர்கள், பணத்தாசை பிடித்தவர்கள், நன்னெறி வாழ்வை இழந்தவர்கள், மனிதரை விலை பொருள்களாக நினைப்பவர்கள். மரணம் வந்து அச்சுறுத்தினாலும் பணத்தைத் தேடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் இவர்கள். பொருளாசையும் பணத்தாசையும் மிகுந்துவிட்டால் உயிரையும் இழக்கவும் இத்தகைய கும்பல் பயப்படுவதில்லை.

கி.பி.79ம் ஆண்டில் இத்தாலியில் வெசுவியஸ் எரிமலை வெடித்தபோது Pompeii, Herculaneum ஆகிய இரு நகரங்கள் அழிந்தன. பின்னர் அதன் இடிபாடுகளை ஆய்வுசெய்தபோது அங்கே ஒரு பெண்ணின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பெண்ணின் கால்கள் எதையோ எடுப்பதற்கு முயற்சி செய்ததையும், அவரின் கைகளில் ஒன்று ஒரு பையின் ஓரத்தைத் தொட்டுக்கொண்டிருந்ததையும் கண்டறிந்தனர். அந்தப் பையில் முத்துக்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது. மரணம், வாசலை நெருங்கியபோதும் அப்பெண் முத்தைத் தேடியிருக்கிறார். ஆம். பணம் என்ற பற்று, பலரைப் பாவச் செயல்களில் வீழ்த்துகின்றது. குழந்தைத் தொழில், பாலியல் வணிகம் என, நவீன மனித வர்த்தகம், பல வடிவங்களில் உலகில் நடக்கின்றன. இவை, பண்பட்ட ஒரு சமூகத்துக்கு அவமானமாக உள்ளன. பணப் பித்தர்களான இவர்கள்,  மனிதர், கடவுளின் சாயல் என்பதை மறக்கும் மூடர்கள். வெசுவியஸ் எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற பேரிடர்கள் இவர்களைத் திருத்துமா? மனிதரின் மாண்பை, மனித உணர்வுகளை அழிக்கும் இந்த வர்த்தகம் ஒழிக்கப்பட நாம் என்னச் செய்யப் போகிறோம். நபிகள் நாயகம் சொன்னார் - மலைகளை அசைப்பவன் வீரனல்ல, மரங்களைப் பெயர்ப்பவனும் வீரனல்ல, பூமியைப் புரட்டினாலும், பொங்கும் கடலை அடக்கினாலும் அது வீரமல்ல, ஆனால் தன் மனத்தை அடக்குபவனே மகத்தான வீரன் என்று.  மனக் கட்டுப்பாடு, எல்லாருக்கும், குறிப்பாக வெட்கப்பட வேண்டிய செயலில் ஈடுபடும் மனித வர்த்தகர்களுக்கு அவசியம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.