2015-02-09 16:31:00

மனிதர் வணிகப் பொருளாக நடத்தப்படுவது வெட்கத்துக்குரிய காயம்


பிப்.09,2015. மனிதர்கள் வியாபாரப்பொருட்களாக கடத்தப்படுவதும், சுரண்டப்படுவதும் வெட்கத்துக்குரிய கொடுஞ்செயல், அது நாகரீக சமூகத்திற்கு இயைந்ததல்ல என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரு வியாபாரப் பொருள்போல் கடத்தப்பட்டு, பல்வேறு துன்பங்களை அனுபவித்த ஆப்ரிக்க அருள்சகோதரி புனித ஜோசஃபின் பகித்தா அவர்களின் திருவிழாவான இஞ்ஞாயிறன்று, மூவேளை செபஉரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதே நாள், மனிதர்கள் வியாபாரப் பொருள்களாக நடத்தப்படுவதற்கு எதிரான நாளாக துறவுசபைகளால் சிறப்பிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

அடிமைகளாக நடத்தப்பட்டும், சுரண்டப்பட்டும் வரும் பெண்கள், குழந்தைகள், பெரியோர் ஆகியோரின் விடுதலைக்காக உழைக்கும் அனைவருக்கும் தன் ஊக்கத்தை வழங்குவதாக உரைத்த திருத்தந்தை, இந்த வெட்கத்துக்குரிய காயத்தை அகற்ற அரசு பொறுப்பிலுள்ளோர் அனைவரும் முன்வரவேண்டும் எனவும் விண்ணப்பித்தார்.

தங்கள் மாண்பை இழந்து துன்பங்களை அனுபவிக்கும் நம் சகோதர சகோதரிகளின் குரலுக்கு செவிமடுக்க நாம் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும் எனவும் மக்களை நோக்கி அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.