2015-02-09 16:54:00

பிறரன்பு நடவடிக்கைகளுக்கு அழைப்புவிடுக்கிறது தவக்காலம்


பிப்.09,2015. ஏழைகள் மற்றும் சத்துணவின்றி வாடும் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நோக்குடன் ஒவ்வொருவரும் உண்ணா நோன்பை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார் பிலிப்பீன்ஸ் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

'நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்கு உணவளித்தீர்கள்' என இயேசு கூறிய வார்த்தைகளை உண்மையாக்க வேண்டுமெனில், நாம் நோன்பிருந்து ஏழைகளுக்கு உணவு வழங்கவேண்டும் என, பிப்ரவரி 18ம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் திருநீற்றுப் புதனுக்கென தயாரிக்கப்பட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார் கர்தினால் தாக்லே.

திருநீற்றுப் புதன் என்பது செபிப்பதற்கும், நோன்பிருப்பதற்கும், பிறரன்பு  நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இறைவன் நமக்கு விடுக்கும் அழைப்பை நினைவூட்டும் நாள் என தன் செய்தியில் கூறியுள்ள மனிலா கர்தினால் தாக்லே அவர்கள், ஏழைச்சிறார்களுக்கு உணவூட்டுதல் என்ற திட்டம், தவக்காலத்தோடு நின்றுபோகாமல்,  ஆண்டு முழுவதும் தொடரப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

2005ம் ஆண்டு மனிலா மறைமாவட்டத்தில் துவக்கப்பட்ட, 'ஏழைச்சிறார்களுக்கு உணவூட்டும் திட்டம்' மூலம் இதுவரை 14 இலட்சத்து 55 ஆயிரத்து 735 சிறார்கள் பயன்பெற்றுள்ளனர்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.