2015-02-07 15:41:00

நகரங்களில் கிறிஸ்தவ வாழ்வின் புளிக்காரமாக வாழ அழைப்பு


பிப்.07,2015. திருப்பீட பொதுநிலையினர் அவை உரோமையில் நடத்திய மூன்று நாள் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட 120 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நகரங்களின் மையத்தில் கடவுளைச் சந்திக்க இயலும் என்று கூறினார்.

நகரத்தின் மையத்தில் கடவுளைச் சந்தித்தல் என்ற தலைப்பில் இக்கூட்டம் நடைபெற்றது பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நகரங்களில், மக்கள் வீடின்றி, உறவுகளின்றி, ஏழ்மை நிலையில் வாழும் சூழல்களிலும், கடவுள் நகரங்களைக் கைவிடவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

நகரங்களில் அதிக வாய்ப்புகளும், பெரும் ஆபத்துகளும் உள்ளன, இங்கு அதிகளவான சுதந்திரமும், நிறைவான வாழ்வும் உள்ளன, அதேநேரம், மனிதத்தைக் கீழ்மைப்படுத்தும் மற்றும் மகிழ்வற்ற நிலையும் காணப்படுகின்றன என்றுரைத்தார் திருத்தந்தை.

மனிதரின் இதயத்தைவிட்டு கடவுள் ஒருபோதும் விலகுவதில்லை என்பதால், கடவுள் நகரங்களிலிருந்து ஒருபோதும் விலகுவதில்லை என்றும், உண்மையாகவே தங்கள் வாழ்வுக்கு அர்த்தம் தேடும் அனைவரோடும் கடவுளின் பிரசன்னம் தொடர்ந்து செல்கின்றது  என்றும்  கூறிய திருத்தந்தை, கடவுளைத் தேடும் இதயங்களுக்குப் பணிசெய்யும் வழிகளைத் திருஅவை தேடுகின்றது  என்று கூறினார்.

பொதுநிலை விசுவாசிகளும் தங்களின் மேய்ப்பர்களின் துணையுடன் நகரங்களில் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, பெரும் நகரங்கள் நற்செய்தி அறிவிப்புக்கு வளமான தளங்களாக இருப்பதால், பொதுநிலையினர் பெரும் நகரங்களில் கிறிஸ்தவ வாழ்வின் புளிக்காரமாக வாழுமாறு அழைப்பு விடுத்தார்.

“நகரங்களில் கடவுளைச் சந்தித்தல், மூன்றாம் மில்லென்யத்தில் நற்செய்தி அறிவித்தல்”  என்ற தலைப்பில் திருப்பீட பொதுநிலையினர் அவை இம்மாதம் 5ம் தேதி தொடங்கிய இந்த ஆண்டுக் கூட்டம் இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.