2015-02-07 15:55:00

தொழிலதிபர்கள் மனித மாண்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுகோள்


பிப்.07,2015. இவ்வுலகில் எல்லாருக்கும் போதுமான உணவு இருக்கும்வேளை, இவ்வுணவு அனைத்து மக்களையும் சென்றடைவதில்லை மற்றும் நம் கண்முன்னே பெருமளவான உணவுப்பொருள்களும், உணவுகளும் வீணாக்கப்படுகின்றன என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“இந்த நம் பூமிக்கு உணவளிப்போம், வாழ்வுக்குச் சக்தி” என்ற தலைப்பில், இத்தாலிய நகரமான மிலானில், பன்னாட்டு அரசியல் மற்றும் தொழிலதிபர்கள் என 500 பேர் கலந்துகொள்ளும் அனைத்துலக கருத்தரங்குக்கு இச்சனிக்கிழமையன்று காணொளிச் செய்தி வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொழிலதிபர்கள் மனித மாண்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படுமாறு கேட்டுக்கொண்டார்.

மிலானில் வருகிற மே மாதம் தொடங்கும் Expo 2015 என்ற கண்காட்சியின் தலைப்பாகவும் இது எடுக்கப்பட்டுள்ளது.

மனித மாண்புக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு, இவர்கள் பிறரன்புக்குச் சாட்சிகளாக இருந்து இந்தப்பூமியின் தலைவர்களாக இல்லாமல், அதன் பாதுகாவலர்களாகச் செயல்படுமாறும் பரிந்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகில் ஒவ்வோர் ஆண்டும் 800 கோடி யூரோக்களுக்கு மேலான மதிப்புள்ள உணவுப்பொருள்கள் குப்பையில் வீசப்படுவதாக ஓர் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.