2015-02-07 16:10:00

சமூகத்தின் உறுதியான வளர்ச்சிக்கு மதங்கள் பங்குதாரர்கள்


பிப்.07,2015. மதங்களும், மதங்களை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களும்  உலகின் உறுதியான வளர்ச்சிக்குப் பங்குதாரர்களாகவும், ஐ.நா.வின் 2015ம் ஆண்டின் வளர்ச்சித் திட்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்கு வல்லமையுள்ள கருவிகளாகவும்  உள்ளன என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் கூறினார்.  

“உலக பல்சமய நல்லிணக்கம்:உறுதியான வளர்ச்சிக்கு மதங்களின் பங்கு” என்ற தலைப்பில் ஐ.நா. பொது அவை சிறப்பித்த நிகழ்வில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Bernardito Auza அவர்கள், மனித சமுதாயத்தின் வரலாற்றில் உறுதியான வளர்ச்சிக்கு மதங்களும், மதம் சார்ந்த நிறுவனங்களும் எப்பொழுதும் தங்களைக் கையளித்து வருகின்றன என்று தெரிவித்தார்.

உலக சமூகங்களின் வாழ்வில் மதங்களும், மதம் சார்ந்த நிறுவனங்களும் ஆற்றிவரும் நற்பணிகளை அங்கீகரிப்பதாய் ஐ.நா.வின் இந்நிகழ்வு அமைந்துள்ளது என்றும் கூறினார்  பேராயர் Auza.

எனினும், உலகின் பல பகுதிகளில், மதங்களும், மதம் சார்ந்த நிறுவனங்களும் ஓரங்கட்டப்படுவது அல்லது கட்டுப்படுத்தப்படுவது, அடிப்படை மனித உரிமை மீறல் மட்டுமல்லாமல், சமூகத்தில் இவை வகிக்கின்ற முக்கிய பங்கையும், இவை தொடர்ந்து ஆற்றும் நற்பணிகளையும் ஏற்கத் தவறுவதாகும் என்பதை நினைவுபடுத்தும் செயலாகவும் ஐ.நா.வின் இந்நிகழ்வு உள்ளது என்றும் கூறினார் பேராயர் Auza.

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி முதல் வாரம் உலக பல்சமய நல்லிணக்க வாரம் ஐ.நா.வில் சிறப்பிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.