2015-02-06 15:36:00

விசுவாசத்துக்காக உயிர்விடும் மக்களுக்காகச் செபிப்போம்


பிப்.06,2015. “நாம் கடவுளில் விசுவாசம் வைத்திருப்பது என்பது, நமக்குத் துன்ப நேரங்கள் இருக்காது என்பது பொருளல்ல, ஆனால், அந்நேரங்களில் நாம் தனியாக இல்லை என்ற அறிவில், அத்துன்பங்களை எதிர்கொள்வதற்குச் சக்தியைக் கொண்டிருப்பதாகும்”என்ற வார்த்தைகளை இவ்வெள்ளியன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டனில் இவ்வியாழனன்று நடைபெற்ற தேசிய செப நிகழ்வுக்கு (National Prayer Breakfast), தனது செபம் நிறைந்த நல்வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகெங்கும் தங்களின் விசுவாசத்துக்காக அடக்குமுறைகளையும், மரணங்களையும் எதிர்கொள்ளும் நம் சகோதர சகோதரிகளுக்காகத் தன்னோடு சேர்ந்து செபிக்குமாறும்,  தனக்காகவும் செபிக்குமாறும் இச்செய்தியில் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்தி, இத்தேசிய செப நிகழ்வில் வாசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அமெரிக்க அரசுத்தலைவர் பாரக் ஒபாமா, காங்கிரஸ் அவை உறுப்பினர்கள், திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமா உட்பட ஆயிரக்கணக்கான முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1953ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் முதல் வியாழனன்று இத்தேசிய செப நிகழ்வு நடைபெற்றுவருகிறது. கூட்டங்கள், மதிய மற்றும் இரவு விருந்துகள் போன்றவை இடம்பெறும் இந்நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த முக்கிய நபர்கள் உட்பட ஏறக்குறைய 3,500 பேர் கலந்து கொள்கின்றனர். அமெரிக்க காங்கிரஸ் அவை உறுப்பினர்கள் சார்பில், கிறிஸ்துவை மையமாகக் கொண்டுள்ள Fellowship Foundation இதை நடத்துகிறது. அரசியல், சமூக மற்றும் தொழில் துறைகளில் முக்கியமானவர்கள் ஒன்றுகூடி உறவுகளைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.