2015-02-06 16:06:00

போக்கோ ஹாரமிடம் மாய்துகுரி வீழ்ந்தால் ஆப்ரிக்காவுக்கே ஆபத்து


பிப்.06,2015. நைஜீரியாவின் மாய்துகுரி நகரம், போக்கோ ஹாரம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால், அது ஆப்ரிக்கக் கண்டம் முழுவதற்கும் பேரிடராக அமையும் என்று எச்சரித்தார் நைஜீரிய தலத்திருஅவை அதிகாரி ஒருவர்.

நைஜீரியாவின் வடகிழக்கிலுள்ள போர்னோ மாநிலத் தலைநகரான மாய்துகுரி, மக்கள்தொகை அதிகமாக உள்ள நகரம், அரசின் அனைத்து நிர்வாக அமைப்புகளும் அந்நகரில் உள்ளன, அதோடு, வடகிழக்குப் பகுதிக்கு முக்கிய வர்த்தக மையமாகவும் அது உள்ளது என்று கூறினார் அருள்பணி Gideon Obasogie.

மாய்துகுரி நகரத்தை, போக்கோ ஹாரம் குழு கைப்பற்றினால், விமான நிலையமும், இராணுவத் தளமும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும், பயங்கரவாதிகள் அதிகமான ஆட்களைச் சேர்ப்பார்கள் என்று எச்சரித்தார், மாய்துகுரி சமூகத் தொடர்பு மைய இயக்குனர் அருள்பணி Obasogie.

இதற்கிடையே, நைஜீரிய எல்லையிலுள்ள காமரூன் நாட்டின் Fotokol நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை போக்கோ ஹாரம் குழுவினர் கொலை செய்துள்ளனர் என்று இவ்வெள்ளியன்று செய்திகள் வெளியாகியுள்ளன.

போக்கோ ஹாரம் குழுவினர், ஒரு மசூதியிலும், வீடுகளிலும் நுழைந்து சொத்துக்களை எறித்துள்ளனர் மற்றும் பலரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.