2015-02-06 11:16:00

நமக்குள் புதைந்துள்ள அரும்பொருளைப் பகிரும்போது பலுகுகிறது


பிப்.06,2015. நாம் ஒவ்வொருவரும் நமக்குள் ஒரு புதையலைக் கொண்டிருக்கிறோம், அதனை நாம் பிறரோடு பகிர்ந்துகொள்ளும்போது, நாம் சந்திக்கும் மற்றவரிடமிருந்து வரும் அரும்பொருள்களோடு சேர்ந்து அது பன்மடங்காகப் பெருகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விளையாட்டுகள், கலை மற்றும் தொழில்நுட்பம் வழியாக உலக இளையோரை ஒன்றிணைக்கும் Scholas Occurentes என்ற பிறரன்பு அமைப்பு நடத்திய நான்கு நாள் அனைத்துலக கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களிடம் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வியாழன் மாலையில் வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில் இவர்களைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அவ்வேளையில், இந்தியா, இஸ்பெயின், பிரேசில், அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட உலகின் பல பாகங்களிலிருந்து ஏழு மாற்றுத்திறனாளி இளையோர் கேட்ட கேள்விகளுக்கும் Google Hangout கணனி தொழில்நுட்பம் மூலம் பதிலளித்தார்.

நீங்கள் ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் புதையலை, திறமைகளை மறைக்காதீர்கள், நீங்கள் செய்யும் செயல் ஒவ்வொன்றும் வாழ்வு எவ்வளவு அழகானது என்பதை பிறர் புரிந்துகொள்வதற்குப உதவும், நாம் நமக்குள் இருப்பதை வழங்கும்போதுதான் அது அர்த்தம் பெறுகிறது எனச் சொல்ல விறும்புகிறேன் என்று கூறினார் திருத்தந்தை.

Google Hangout கணனி தொழில்நுட்பம் மூலம், இந்தியாவிலிருந்து பேசிய 13 வயது Manosh காது கேளாதவர். இஸ்பெயினிலிருந்து பேசிய நால்வரில், 13 வயது இசபெல் பார்வையற்றவர்.12 வயது Bautista, autism நோயாளி. 17 வயது Alicia, Elvira ஆகிய இருவரும் Down syndrome நோயாளிகள்.

இவர்கள் ஒவ்வொருவரும் திருத்தந்தையிடம் தாங்கள் சொல்ல விரும்பியதையும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முறை பற்றியும் தாராளமாகப் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.