2015-02-06 15:42:00

அமெரிக்க காங்கிரஸ் அவையில் திருத்தந்தை பிரான்சிஸ் உரை


பிப்.06,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டு காங்கிரஸ் அவை வரலாற்றில் முதன்முறையாக ஒரு திருத்தந்தை அங்கு உரையாற்றவுள்ளார், அந்நிகழ்வு வருகிற செப்டம்பர் 24ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாஷிங்டன் செல்லும்போது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வியாழனன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் இதனை அறிவித்த அமெரிக்க காங்கிரஸ் அவை பேச்சாளர் John Boehner அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்களின் அழைப்பை ஏற்றுள்ளதற்கு அமெரிக்கர்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருப்பதாகவும், இந்நிகழ்வு அமெரிக்க வரலாற்றில் சிறப்புமிக்கதாய் அமையும் எனவும் தெரிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருணையும் மாண்பும் மிக்க செய்தி, உலக அளவில் கொந்தளிப்பு நிலவிவரும் இக்காலத்துக்கு மிகவும் முக்கியமானது என்றுரைத்த John Boehner அவர்கள், காங்கிரஸ் அவையில் உரையாற்றும், கத்தோலிக்கத் திருஅவையின் முதல் தலைவராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உள்ளார்  என்றும் கூறினார்.

மேலும், அமெரிக்கர்களின் இவ்வழைப்பை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுள்ளதற்கு, வாஷிங்டன் உயர்மறைமாவட்டமும் தனது மகிழ்வையும், நன்றியையும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.