2015-02-05 15:51:00

கிரீஸ் நாட்டு ஆயர்களுடன் திருத்தந்தையின் அத்லிமினா சந்திப்பு


பிப்.05,2015 உங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் மக்களிடம் உடன்பிறந்தோர்  உணர்வை வளர்க்க உங்களுக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புக்களையும் தவறாமல் பயன்படுத்துங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கிரீஸ் நாட்டு ஆயர்களிடம் கூறினார்.

புனித பேதுருவின் கல்லறையைக் கண்டு வணங்கவும், அவரின் வழித்தோன்றலான உரோமைய ஆயருடன் தங்கள் உறவைப் புதுப்பித்துக் கொள்ளவும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உலகின் பல நாடுகளிலிருந்தும் அத் லிமினா பயணத்தை மேற்கொண்டு வரும் ஆயர்கள் வரிசையில், தற்போது கிரீஸ் நாட்டிலிருந்து வத்திக்கானுக்கு வருகை தந்திருக்கும் ஆயர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தார்.

கிரீஸ் நாட்டில் பொருளாதார நிலை தற்போது உறுதியற்றிருப்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை, இந்நிலையால் மக்களிடையே, குறிப்பாக, இளையோரிடையே நம்பிக்கை இழக்கும் கலாச்சாரம் வளர்ந்துவிடாமல் பாதுகாப்பது ஆயர்களின் கடமை என்று வலியுறுத்தினார்.

நற்செய்திப் பணியையும், மனித நலப் பணிகளையும் முன்னெடுத்துச் செல்ல பணியாளர்கள் தேவை என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இறையழைத்தலை ஊக்குவித்தல், இறை பணியாளர்களை உருவாக்குதல் ஆகிய முக்கியப் பணிகளில் ஆயர்கள் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

குடும்ப உறவுகளைப் பலப்படுத்துதல், முதியோரை ஆதரவற்றவர்களாக விட்டுவிடாமல் அவர்களைப் பராமரித்தல் ஆகியப் பணிகளிலும் கிரீஸ் நாட்டு கத்தோலிக்கத் திருஅவை ஆர்வமாக ஈடுபடவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆயர்களிடம் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.