2015-02-05 15:37:00

இலங்கை அரசு மாற்றத்தால் தாயகம் திரும்பும் நம்பிக்கை


பிப்.05,2015 இலங்கையில் அரசு மாற்றம் ஏற்பட்டதாலும், அங்குள்ள அரசியல் தலைவர்கள் நம்பிக்கை தரும் வார்த்தைகள் சொல்லியிருப்பதாலும், தாங்கள் திரும்பவும் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பும் நம்பிக்கை பிறந்துள்ளது என்று இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் ஒருவர் கூறியுள்ளார்.

UCAN செய்தி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், சென்னைக்கருகே கும்மிடிப் பூண்டியில் அமைந்துள்ள புலம் பெயர்ந்தோர் முகாமில் மேற்கொண்ட கருத்துப் பதிவின்போது, அம்முகாமில் வாழும் பலர், தங்கள் தாய் நாடு திரும்பும் நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவு நம்பிக்கை தரும் மாற்றங்கள், குறிப்பாக, தமிழர்கள் நடுவே நம்பிக்கை தரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக முகாமில் வாழ்வோர் கூறியுள்ளனர்.

இலங்கையின் புதிய தலைவர் மைத்ரிபால சிறிசேன அவர்கள் இம்மாதம் இந்தியாவுக்கு வருகை தருவது, இந்தியாவில் வாழும் புலம்பெயர்ந்தோரின் பிரச்சனைகளுக்கு சில தீர்வுகளைக் கொணரும் என்றும் முகாம் வாழ் மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நிலவிவந்த உள்நாட்டுப் போரினால், 90,000க்கும் அதிகமானோர் இந்தியாவில் புலம்பெயர்ந்தோராய் வாழ்கின்றனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.