2015-02-04 16:33:00

விற்பனைப்பொருளாக பெண்கள் பயன்படுத்தப்படுவதை ஒழிக்க வேண்டும்


பிப்.04,2015 பெண்களுக்கு உடலளவில் இழைக்கப்படும் கொடுமைகளையும், அவர்கள் உடல் ஒரு விற்பனைப் பொருள்போன்று பயன்படுத்தப்படுவதையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

'சமத்துவம் மற்றும் வேறுபாடுகளுக்கிடையே பெண்மைக் கலாச்சாரம்' என்ற மையக்கருத்துடன், பிப்ரவரி 4, இப்புதன் முதல் 7, இச்சனிக்கிழமை முடிய வத்திக்கானில் நடைபெறும் ஒரு கருத்தரங்கைக் குறித்து, திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவர், கர்தினால் ஜியான்பிராங்கோ இரவாசி அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.

ஆண் பெண் உறவுகளில் சமத்துவத்தை நிலைநாட்ட கருத்தரங்குகள் மட்டும் போதாது, அவற்றைத் தொடர்ந்து செயல்வடிவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதில் திருப்பீடம் தெளிவான நிலைப்பாடு கொண்டுள்ளது என்று கர்தினால் இரவாசி அவர்கள் தெரிவித்தார்.

கத்தோலிக்கத் திருஅவையில் பெண்கள் முழுமையாக ஈடுபட்டு ஆற்றக்கூடிய பல பணிகள் பற்றியும் இக்கருத்தரங்கில் பேசப்படும் என்று கர்தினால் இரவாசி அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.