2015-02-04 15:55:00

பேராயர் ரோமெரோ அவர்களின் மறைசாட்சிய மரணம் சக்தி தந்தது


பிப்.04,2015 எல் சால்வதோர் நாட்டின் உள்நாட்டுப் போரின்போது தங்கள் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு, பேராயர் ஆஸ்கர் ரோமெரோ அவர்களின் மறைசாட்சிய மரணம், அர்த்தமும், சக்தியும் தந்தது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பிப்ரவரி 3, இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சான் சால்வதோர் நகரில் கொல்லப்பட்ட பேராயர் ரோமெரோ அவர்களை முத்திப்பேறு பெற்றவராக உயர்த்துவதற்கு இசைவு தந்ததையொட்டி, இப்புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய திருப்பீட குடும்பங்கள் அவைத் தலைவரும், பேராயர் ரோமேரோவை புனிதராக உயர்த்தும் பணியில் ஈடுபட்டிருந்தவருமான பேராயர் Vincenzo Paglia அவர்கள் இவ்வாறு கூறினார்.

பேராயர் ரோமெரோ அவர்கள், மக்களின், குறிப்பாக, ஏழைகளின் மேய்ப்பராக விளங்கியது, சமூகச் சிந்தனை கொண்ட இயேசு சபை அருள் பணியாளர் Rutilio Grande அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தது, திருப்பலி நிகழ்த்துகையில் கொல்லப்பட்டது ஆகிய அம்சங்களை பேராயர் Paglia அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பேராயர் ரோமெரோ அவர்களின் மறைசாட்சிய மரணத்தை, குறிப்பாக, அவர் ஏழைகள் சார்பில் குரல் எழுப்பிய துணிவை ஆங்கிலிக்கன் சபையினரும் மதிப்புடன் சிறப்பித்து, Westminster பேராலய முகப்பில் அவரது உருவச் சிலையை நிறுவியிருப்பதையும் பேராயர் Paglia அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

1917ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்த, சான் சால்வதோர் பேராயர் Oscar Arnolfo Romero Galdámez அவர்கள், கிறிஸ்தவ விசுவாசத்துக்காக 1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆதாரம் : Fides/Zenit/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.