2015-02-04 15:31:00

கடுகு சிறுத்தாலும்..: புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்


ஓர் அரசர், நம்பக்கூடிய சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். நாட்டின் பல பகுதிகளிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால் அரசருக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒரு நாள் கந்தல் உடை அணிந்த  ஓர் ஏழை அரசவைக்கு வந்து, தான் அரசரைக் காண விரும்புவதாகக் கூறினார். அரசர் சம்மதம் தெரிவித்ததும்  அந்த ஏழை சொன்னார், “அரசே, உங்களுக்கு நினைவு இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்” என்று. அரசருக்கு கோபம் வந்து விட்டது. ''நீ பொய் சொல்கிறாய். நானாவது உனக்குப் பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?' என்று கத்தினார். உடனே இந்த ஏழை சொன்னார், ''அரசே, நீங்களே ஒத்துக்கொண்டுவிட்டீர்கள், நான்  சரியான பொய் சொன்னேன் என்று. எனவே போட்டி விதியின்படி எனக்குப் பொற்காசுகள் கொடுங்கள்'' என்று. அரசர், தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தார். ''இல்லை, இல்லை, நீ பொய் சொல்லவில்லை'' என்று அவசரமாக மறுத்தார். ஏழை சொன்னார், ''நல்லது அரசே, நான் சொன்னது பொய் இல்லை, உண்மைதான் என்றால், எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக்  கொடுங்கள்,'' என்று. அரசர், அந்த ஏழையை சிறந்த பொய்யர் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினார்.

அறிவை எங்கு, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்தவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.