2015-02-04 16:10:00

கடவுள் பெயரைச் சொல்லி வன்முறையை நியாயப்படுத்த முடியாது


பிப்.04,2015 இன்றையக் காலக் கட்டத்தில் ஒரு நாட்டில் நிலவும் அமைதியற்றச் சூழல் வேறுபல நாடுகளையும் பாதிக்கின்றன என்பதால், மத்தியக் கிழக்குப் பகுதியில் நிகழ்வன, பல நாடுகளைப் பாதித்து வருகின்றன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பிப்ரவரி 2 இத்திங்கள் முதல் 4 இப்புதன் முடிய மத்தியத்தரை நாடுகளின் 9வது பாராளுமன்றக் கூட்டத்திற்கு திருத்தந்தையின் சார்பில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

மத்தியத்தரை நாடுகளின் பாராளுமன்றக் கூட்டத்தில், திருப்பீடம், ஒரு பார்வையாளராக அழைக்கப்பட்டுள்ளதற்கு தன் நன்றியைத் தெரிவித்த கர்தினால் பரோலின் அவர்கள், அரசியல் உரையாடல் வழியே மத்தியத் தரை நாடுகளின் பிரச்சனைகளைத் தீர்க்க பாராளுமன்றம் மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டினார்.

சிரியாவில் தொடர்ந்துவரும் வன்முறைகளும், 2014ம் ஆண்டு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ISIS மேற்கொண்ட பல கொடூரச் செயல்களும் திருத்தந்தை, மற்றும் திருப்பீடத்தின் கவலையை அதிகரித்து வருகின்றன என்று கர்தினால் பரோலின் அவர்கள் இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கடவுளின் பெயரைச் சொல்லி எந்த ஒரு மதமும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது என்பதை, கர்தினால் பரோலின் அவர்களின் மடல் வலியுறுத்திக் கூறியுள்ளது.

மேலும், "சந்திப்பு, ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் மதிப்பு, இணைந்து வாழ்தல் ஆகிய பண்புகளைப் புதுப்பிக்கும் இடமாக மத்தியத் தரைப் பகுதியை மாற்றுவது நமக்கு முன் இருக்கும் சவால்" என்ற வார்த்தைகளை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் Twitter செய்தியாக இப்புதனன்று வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.